புகைப்பட கலைஞர் டூ இயக்குனர் – ஓராண்டு நினைவலைகளில் கே.வி.ஆனந்த்

பத்திரிக்கை துறையில் புகைப்பட கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, ஒளிப்பதிவாளராக மாறி, பின் வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். கடந்தாண்டு இதே நாளில் லேசான கொரோனாவாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர் மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்து ஓராண்டாகி விட்டது. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்…

1966ம் ஆண்டு அக்., 30ம் தேதி சென்னையில் பிறந்தவர் கே.வி.ஆனந்த். பத்திரிகை துறையில் புகைப்படக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின் சினிமாவிற்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து அவருடன் கோபுர வாசலிலே, அமரன், தேவர் மகன், திருடா திருடா உள்ளிட்ட பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

மலையாளத்தில் இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்கிய தென்மாவத்து கொம்பத்து என்ற படத்திற்காக பி.சி.ஸ்ரீராமை அணுகினார். ஆனால் அவர் வேறு படங்களில் பிஸியாக அவரால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதையடுத்து அவரின் சிபாரிசின் பேரில் கே.வி.ஆனந்த் அந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முதல் படத்திற்கே சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றார்.

தமிழில் ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றிய முதல்படம் காதல் தேசம். அதன்பின் நேருக்கு நேர், முதல்வன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். 2005ல் ஸ்ரீகாந்த் நடித்த ‛கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‛அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் படங்களை இயக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவை ஆங்கிலப் படங்களுக்கு நிகராக கொண்டு செல்லும் இயக்குனர்களில் ஒருவராக இவரின் பங்கு அதிகம் இருந்தது. நிச்சயம் இப்போது இவர் இருந்திருந்தால் சினிமாவை இன்னும் அடுத்த தளத்திற்கு தனது படைப்புகளால் கொண்டு சென்றிருப்பார். ஆனால் அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு நிச்சயம் பேரிழப்பே. என்றாலும் அவரது படைப்புகள் மூலம் காலத்திற்கும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.