எல்லையில் கை வைத்தால் காலி: சீனாவுக்கு புதிய தளபதி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘சீன எல்லையில் தற்போதுள்ள நிலையே தொடரும். அதை மாற்ற யாரையும் அனுமதிக்க மாட்டோம்,’ என்று இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியான மனோஜ் பாண்டே, சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான எம்.எம்.நரவானே நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.  இதையடுத்து, துணை தலைமை தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே,  புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்று உள்ளார். அவருக்கு டெல்லி தெற்கு பிளாக் பகுதியில் நேற்று ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு: தற்போது  உலகின் புவிசார் அரசியல் வேகமாக மாறி கொண்டு வருகிறது. இதனால், நம்முன் ஏராளமான சவால்கள் உள்ளன. இப்போதும், எதிர்காலத்திலும் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, ராணுவத்தை சிறந்த வகையில் தயார்நிலையில் வைப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன். தேச பாதுகாப்பு சவால்கள், மோதல் சூழ்நிலைகளை கடற்படை, விமானப்படை ஆகிய மற்ற படைகளுடன் இணைந்து ராணுவம் எதிர்கொள்ளும்.ராணுவத்துக்கு இடையே ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதே எனது பெரிய நோக்கம். படைகளின் தயார்நிலையை உறுதிப்படுத்தும் வகையில் சீர்திருத்தங்கள், சீரமைப்புகள் மேற்கொள்ளப்படும். சீனா எல்லையில் தற்போதுள்ள நிலையே தொடரும். எல்லையின் தன்மையை யாராவது மாற்ற முயன்றால், அதை இந்திய ராணுவம் அனுமதிக்காது. தக்க பதிலடி கொடுக்கும்படி வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அசல் எல்லை கட்டுப்பாடு எல்லையை ராணுவம் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அங்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான அளவுக்கு வீரர்களும், தளவாடங்களும் குவிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.