புதுடெல்லி: முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி.யாக ரூ.1.67,540 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் 2020க்கு முந்தைய நிலையை போல் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதி, சந்தைப்படுத்துதல், வர்த்தகம் போன்றவை வழக்கத்தை விட சுறுசுறுப்பாக நடக்கின்றன. இதன் காரணமாக, வருமான வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றின் வசூலும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றன. குறிப்பாக, இந்தாண்டு ஜனவரிக்குப் பிறகு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி.யாக ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி வசூலாகி புதிய சாதனையை படைத்துள்ளது. இது, கடந்தாண்டு ஏப்ரலில் வசூலானதை விட 20 சதவீதம் அதிகம். இது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி வசூலாகி இருக்கிறது. இதில், சிஜிஎஸ்டி வகையில் ரூ.33,159 கோடியும், எஸ்ஜிஎஸ்டி வகையில் ரூ.41,793 கோடியும் வசூலாகி இருக்கின்றன. பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.36,705 கோடி உட்பட ஐஜிஎஸ்டி வசூல் ரூ.81,939 கோடியாகும். மேலும், இறக்குமதி மூலமாக கிடைத்த ரூ.857 கோடி உட்பட செஸ் வரி மூலமாக ரூ.10,649 கோடி கிடைத்துள்ளது. கடந்த மார்ச்சில் வசூலான ஜிஎஸ்டி.யை விட, ஏப்ரலில் ரூ.25,000 கோடி கூடுதலாக வசூலாகி இருக்கிறது. இது, கடந்தாண்டு ஏப்ரலில் கிடைத்ததை விட 20 சதவீதம் அதிகமாகும்,’ என கூறப்பட்டுள்ளது.
