செங்கல்பட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பொறுப்பாளரை நியமிப்பது தொடர்பான பிரச்சனையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கியதாக கூறப்படும் திமுக கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான செல்வகுமார், தாம் சொல்பவர்களைத் தான் 100 நாள் வேலை திட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்க வேண்டுமென துணை வட்டார வளர்ச்சி அலுவலரான பாலசுப்பிரமணியத்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மறுப்பு தெரிவித்த நிலையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கவுன்சிலர் செல்வகுமார் பாலசுப்பிரமணியத்தை அவரது அலுவலகத்திலேயே வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாலசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான கவுன்சிலர் செல்வகுமாரை தேடி வருகின்றனர்.