லாகூர்-சவுதி அரேபியாவின் மதினா பள்ளி வாசலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக பலர் கூச்சலிட்ட சம்பவம் தொடர்பாக, பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உட்பட, 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கைது
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோல்வி அடைந்ததை அடுத்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மதினா பள்ளி வாசலில் தொழுகை நடத்துவதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் சென்றார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை பார்த்து துரோகி என்றும், திருடன் என்றும் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தில் இருந்த ஐந்து பாகிஸ்தானியர்களை மதினா போலீசார் கைது செய்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக, பாக்.,கின் பஞ்சாப் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சதித்திட்டம்
அதன் விபரம்:முன்னாள் பிரதமர் இம்ரான் கான், முன்னாள் அமைச்சர்கள் பவாத் சவுத்ரி, ஷேக் ரஷீத், முன்னாள் துணை சபாநாயகர் குவாசிம் சூரி, பிரதமரின் முன்னாள் ஆலோசகர் ஷபாஸ் குல் உள்ளிட்டோர், பிரதமரை அவமதிக்க சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.இதற்காக, பாக்., மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து இம்ரான் ஆதரவாளர்கள் 100 பேரை மதினா அனுப்பி, புனித தலத்தை அவமதிக்கும் விதமாக கூச்சலிட வைத்தனர்.
இதில், இம்ரான் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே சவுதி சென்ற பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்த நாட்டின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு, 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க, சவுதி அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.17 அதிகாரிகள் ‘சஸ்பெண்ட்’பாகிஸ்தான் அரசு சார்பில், ‘பி டிவி’ என்ற தொலைக்காட்சி நடத்தப்படுகிறது. பிரதமர்உடன் பயணித்து அவரது நிகழ்ச்சிகளை உடனுக்குடன் அளிக்க ஒரு குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் லாகூரில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதன் காட்சிகள், ‘பி டிவி’யில் ஒளிபரப்பாகவில்லை. நவீன ‘லேப் டாப்’கள் வழங்கப்படாததால், காட்சிகளை, ‘ஆன்லைன்’ வாயிலாக அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதாக, பிரதமருடன் சென்ற குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து, ‘பி டிவி’யின் 17 அதிகாரிகள் உடனடியாக,’சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.