திருக்குளம் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் போராட்டம்; பெண்ணாடத்தில் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா அறிவிப்பு| Dinamalar

பெண்ணாடம் : பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலின் திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், எனது தலைமையில் போராட்டம் அறிவியுங்கள் என, கட்சி நிர்வாகிகளிடம், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.கடலுார் மாவட்டம் பெண்ணாடத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவில் அருகில் கோவிலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 78 சென்ட் பரப்பிலான திருக்குளம் அமைந்துள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருக்குளம் பராமரிப்பின்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடு, கடைகளை கட்டி, கழிவு நீரை குளத்தில் விடுகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மற்றும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் என இரு முறை இந்து சமய அறநிலையத்துறையின் அப்போதைய விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலன் தலைமையிலான அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு, துார் வாரி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார்.அப்போதைய கோவில் செயல் அலுவலர் கொளஞ்சி முன்னிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதன் பின், 7 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது, பக்தர்களிடையை அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணியளவில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கோவில் திருக்குளத்தை பார்வையிட்டார். ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு அனுப்பிய மனுக்களை நிர்வாகிகள் அவரிடம் வழங்கினர். ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றா விட்டால் என் தலைமையில் தொடர் போராட்டம் அறிவியுங்கள் என கட்சி நிர்வாகிகளிடம் எச்.ராஜா தெரிவித்தார்.மாவட்ட தலைவர் மாமல்லன், முன்னாள் மாவட்ட தலைவர் தாமரை மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, பட்டியல் அணி விநாயகமூர்த்தி, கிேஷார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.