தொடர் தோல்வியால் 'ரூட்' மாறும் நடிகர்கள்!

தமிழில் உச்ச நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வி அடைவதாலும், தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டம் அடைவதாலும், நடிகர் – நடிகையர் தங்கள் 'ரூட்'டை அதிரடியாக மாற்றியுள்ளனர்.தென்னிந்திய திரையுலகில், சமீப காலமாக எவ்வளவு பெரிய பட்ஜெட் படமானாலும், கதைக்கு முக்கியத்துவம் இல்லையென்றால், அடுத்த நாளே தியேட்டர்கள் காலியாகி விடுகின்றன.

ராதே ஷ்யாம் எனும் மிகப்பெரிய படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று, தன் சம்பளத்தின் பெரும் தொகையை, நடிகர் பிரபாஸ் திருப்பி கொடுத்தார்.அஜித் நடித்த வலிமை வெற்றிப் படம் என்றாலும், அதன் வசூல் விபரம் கேள்விக்குறியாக மாறியது. இதனாலேயே அப்படத்தின் தயாரிப்பாளருக்கே, மீண்டும் படம் நடிக்க அஜித் முன்வந்தார்.சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படமும், கடும் விமர்சனத்திற்கு ஆளானது. தனுஷ் சமீபத்தில் நடித்த வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள், 'ஆன்லைன்' தளத்தில் வெளியாகின; விமர்சன ரீதியாகவும் பின்னடைவையே சந்தித்தன.

அதேவேளையில், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர்., கன்னடத்தில் உருவான 'கே.ஜி.எப்., – 2' படங்கள், அந்தந்த மாநில மொழி மட்டுமின்றி, அண்டை மாநில மொழிகளிலும் வெளியாகி வசூலை வாரி குவித்து உள்ளன. அதேபோல், பயணிகள் கவனிக்கவும் படம், விரைவில் வெளியாக உள்ள அக்கா குருவி போன்ற படங்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வரவேற்பு நிச்சயம்.'தரமான கதையம்சம், சின்ன பட்ஜெட் படங்கள் தான் சினிமாவை வாழ வைக்கும்' என்பது, திரையுலகினர் பலரது கூற்றாக உள்ளது.

மக்களின் வாழ்வியலோடு ஒன்றிய கதைகள், லாபத்தில் சம்பளம் போன்றவை மட்டுமே, தமிழ் சினிமாவை இனி வாழ வைக்கும் என்ற நிலையில், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சிலர், சுதாரித்து தங்கள் ரூட்டை மாற்றியுள்ளனர். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றோர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு உள்ளிட்ட பன்மொழி படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். சிலர் 'அமேசான்' போன்ற ஓ.டி.டி., தளங்களில் உருவாகும் படங்கள் மற்றும் தொடர்களில் நடிக்க களம் இறங்கி விட்டனர்.

கொரோனாவால் ஓ.டி.டி., தளங்கள் அதிகம் உருவாகி, தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை அமைத்து கொடுத்தன. தற்போது முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படம் மற்றும் தொடர்களை, ஓ.டி.டி.,யில் வெளியிட, அமேசான் முடிவு எடுத்துள்ளது. இது போன்ற தொடர்கள் ஆங்கிலம், ஹிந்தியில் அதிகம் வெளியாகியுள்ளன. தற்போது, தமிழிலும் தொடர்களாக வெளிவர உள்ளன.

இந்த வரிசையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கில், 40க்கும் அதிகமான புதிய படம் மற்றும் தொடரின் தலைப்புகளை அறிவித்துள்ளனர். இதை திரைப்பட வாடகை சேவையின் கீழ் வழங்க உள்ளனர். அதாவது தேவைக்கு தரப்படும் படமாக இவை இருக்கப் போகின்றன. இவர்கள் தயாரிக்கும் படம் மற்றும் தொடர்களில் விஜய் சேதுபதி, ஆர்யா, எஸ்.ஜே.சூர்யா, கதிர், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சின்னத்திரைக்கும் சிக்கல்!
தேவைக்கு மட்டுமே படங்களை வாடகை கொடுத்து பார்க்கும் சேவையில், இந்திய மற்றும் சர்வதேச படங்களை வெளியீட்டுக்கு முன்பாகவே கூட பார்க்கலாம்.ஓ.டி.டி., பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அடுத்த ஐந்தாண்டுகளில், 'அமேசான் ப்ரைம் வீடியோ' தன் முதலீட்டை, இந்தியாவில் இரண்டு மடங்கை விட அதிகமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தமிழ் சினிமாவில், கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட சூழலை நன்கு அறிந்த நடிகர்கள் சூர்யா, கமல் ஆகியோரும், சேரனுக்கு பின் ஓ.டி.டி.,க்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். அமேசானின் புதிய முயற்சியால், நடிகர்களும் புதிய ரூட்டில் பயணிக்க துவங்கி விட்டனர். ஓ.டி.டி., வரவால், ரசிகர்களை பாடாய்படுத்தும் சின்னத்திரை 'சீரியல்'களுக்கும் 'குட்பை' சொல்லும் நேரம் வந்துள்ளது. இதை கணித்த பலர், 'ரியாலிட்டி ஷோ'க்களுக்கு மாறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.