புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவு தேச துரோகத்தை வரையறுக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதும் அரசை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை தண்டிக்கும் சட்டமாக தேச துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக, எடிட்டர்ஸ் கில்டு எனப்படும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இது தொடர்பாக ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும், வரும் மே 5ம் தேதி முதல் வழக்கின் இறுதி விசாரணை தொடங்கும் எனவும் கடந்த ஏப்ரல் 27ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. வரைவு பிரமாண பத்திரம் தயாராகி விட்டதாகவும், அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முந்தைய உத்தரவுப்படி இறுதி விசாரணை நாளை முதல் தொடங்குமா என்பது சந்தேகமாகி உள்ளது.
