கஞ்சன்ஜங்கா உச்சியில் இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு

காத்மாண்டு: இந்திய மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர் (52) உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவில் ஏறும்போது உயிரிழந்தார்.

உலகின் உயரமான 8 சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன. சூடான சீதோஷ்ணநிலையும், அமைதியான காற்றும் வீசும் வசந்தகால மலையேற்றத்திற்காக நூற்றுகணக்கான மலையேறும் வீரர்கள் இமயமலைக்கு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர், நேபாளத்தில் இருக்கும் உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவில் வசந்தகால மலையேற்றத்தில் ஈடுப்பட்டிருந்தார். வியாழக்கிழமை சிகரத்தின் உச்சியை அடையும் நேரத்தில் 8,200 மீட்டர் உயரத்தில் ஏறும்போது அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, அந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த பயோனீயர் அட்வென்சர் நிறுவனத்தின் நிவேஷ் கார்கி கூறும்போது, “மற்ற எல்லோரையும் விட அவர் மெதுவாகவே ஏறினார். அவருக்கு உதவியாக இரண்டு வழிகாட்டிகள் இருந்தனர். அவர் மிகவும் களைப்படைந்திருந்தார். அதனால் அவரால் தொடர்ந்து ஏறமுடியாமல் சரிந்து வீழ்ந்துவிட்டார். அவரது இறப்பு குறித்து குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்பதற்கான வேலைகளில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது” என்றார்.

நேபாள அரசு, 8,586 மீட்டர் உயரமுள்ள கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறுவதற்காக இந்தாண்டு 68 வெளிநாட்டு மலையேறும் வீரர்களுக்கு அனுமதி அளித்திருந்தது. அதில் பலர் வியாழக்கிழமை உச்சியை வந்தடைந்தனர்.

நாராயணன் ஐயர், இந்த ஆண்டு கஞ்சன்ஜங்கா மலையேற்றத்தின்போது உயிரிழந்த மூன்றாவது வீரராவார். கடந்த மாதம், கிரேக்க நாட்டு மலையேற்ற வீரர் ஒருவர், 8,167 மீட்டர் உயரமுள்ள தவுளகிரி மலையில் இருந்து கீழே இறங்கும்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சில நாட்கள் கழித்து, உபகரணங்களை எடுத்துச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த மலையேறும் வீரர் ஒருவர் எவரெஸ்ட் மலையில் இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டார்.

2020-ம் கரோனா பெருந்தொற்று பொது முடக்கத்திற்கு பின்னர், கடந்த ஆண்டுதான் நேபாளம் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.