பெங்களூர்: பிரபல ஸ்மார்ட்போன் கம்பெனி ஷாவ்மி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி சொத்தை கடந்த மாதம் அமலாக்கத்துறையினர் முடக்கினர். சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்(பெமா) கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதை எதிர்த்து, அந்த நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான விசாரணையின்போது நிறுவன உயர் அதிகாரிகளை அமலாக்க துறையினர் மிரட்டி துன்புறுத்தியதாக ஷாவ்மி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாயின. இது தொடர்பாக அமலாக்க துறை நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘ஷாவ்மியின் உயர் அதிகாரிகளை அமலாக்கதுறை அதிகாரிகள் மிரட்டினர், துன்புறுத்தினர் என்று கூறப்படுவதில் எந்த வித உண்மையும் இல்லை, இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு ஆகும்’ என்று தெரிவித்துள்ளது.
