கோவில்களை இடித்ததுதான் திமுக அரசின் சாதனை- இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி

நெல்லை:

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பாளையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டமாகும். அப்போது திட்டமதிப்பீடு 300 கோடி ரூபாய். ஆனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது திட்டமதிப்பீடு உயர்ந்து பட்ஜெட்டில் 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை விரைவில் முடித்தால் 280 குளங்கள் நிரம்பும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும். ராதாபுரம், திசையன்விளை சுற்று வட்டார பகுதிகளில் நிலவும் குடிநீர் பஞ்சம் நீங்கும்.

ஆனால் இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இந்த திட்டத்திற்காக நிலம் ஒதுக்கிய விவசாயிகளில் சிலருக்கு இன்னும் உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே ஆமை வேகத்தில் பணி நடைபெறுவதை கண்டித்து நாளை பாளையங்கோட்டையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

தி.மு.க. அரசு கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு. இந்து கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இந்து பண்டிகைகளுக்கு தொடர்ந்து இடைஞ்சல் செய்து வருகிறது.

தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலாக பட்டினபிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்து உள்ளது. இதற்கு எதிராக மதுரை ஆதீனம் தைரியமாக பேட்டி அளித்தார். இதனால் அவருக்கு சிலர் மிரட்டல் விடுத்ததாக தகவல் வந்துள்ளது. காலம் காலமாக மரபுபடி பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க கூடாது.

100க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது தான் இந்த ஆட்சியின் சாதனை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், பொதுச்செயலாளர் அரசு ராஜா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படியுங்கள்… தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.