புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பாக, முதல்வர் மம்தாவின் நெருங்கிய உறவினரின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அசன்சோல் பகுதியை சுற்றியுள்ள குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் மாநில அரசுக்கு சொந்தமான ‘ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்க நிறுவனம்’ நிலக்கரி எடுக்கிறது. இங்கிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரிகளை திருட்டுத் தனமாக எடுத்துச் சென்று விற்கும் செயலில் அனுப் மஜ்ஹி என்ற உள்ளூர் நபர் ஈடுபட்டுள்ளார். இந்த சட்டவிரோத விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை, முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிபிஐ கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு பதிவு செய்தது.
இதன் அடிப்படையில் அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு மற்றும் டெல்லி நீதிமன்றம் ருஜிரா பானர்ஜிக்கு பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை இதையடுத்து ருஜிரா பானர்ஜிக்கு ஜாமீனில் வரக்கூடிய வாரன்ட்டை, மாஜிஸ்திரேட் சினிக்தா சர்வாரியா பிறப்பித்து, வழக்கை வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.