புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒரு எம்பி.யின் வாக்குமதிப்பு 708ல் இருந்து 700 ஆக குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வரும் ஜூலையில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சட்டபேரவை உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொருத்து, எம்பி.க்களின் வாக்கு மதிப்பு கணக்கிடப்படுகிறது.ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த மாநில அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 83ல் இருந்து 90 ஆக அதிகரித்து தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் சமீபத்தில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீரில் சட்டபேரவை தேர்தல் நடந்து புதிய அரசு பதவியேற்பதற்கு இன்னும் சில மாதங்களாகும் என்று தெரிகிறது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. காஷ்மீரில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாததால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு எம்பி.யின் வாக்கு மதிப்பும் 708ல் இருந்து 700 ஆக குறைக்கப்படும் என தெரிகிறது.
