தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு அமைய முக்கிய காரணமாக இருந்தார். தற்போதும் அரசுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அதனை தீர்த்து வைப்பதில் சரத்பவார் முன்னின்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சரத்பவாருக்கு சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சரத்பவார் தனக்கு வந்துள்ள கொலை மிரட்டல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாராமதியின்(சரத்பவார் சொந்த ஊர்) காந்திக்கு நாதுராம் கோட்சேயை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது” என்று கொலை மிரட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். @NikhilBhamre8 என்ற ஐடியிலிருந்து அனுப்பப்பட்டுள்ள கொலை மிரட்டலில், “பாராமதி அங்கிள் மன்னித்துவிடுங்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்விட்டரில் அனுப்பப்பட்டுள்ள இந்த கொலை மிரட்டலை பலர் லைக்-கும் செய்துள்ளனர்.

சிலர் இந்த செய்தியை ரீ ட்வீட் செய்துள்ளனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவாட் அளித்துள்ள பேட்டியில், கொலை மிரட்டலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்
இது தொடர்பாக சிவசேனா செய்தித்தொடர்பாளர் மணிஷா காயண்டே அளித்த பேட்டியில், “யார் இந்த கொலை மிரட்டலை விடுத்து இருப்பார்கள் என்று ஆலோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. யார் கோட்சேயை கடவுளாக வணங்குகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். கொலை மிரட்டல் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கொலை மிரட்டல் விடுத்திருப்பதன் மூலம் அவர்களின் கொள்கை தெளிவாக தெரிகிறது” என்று தெரிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் அளித்த பேட்டியில், “சமுதாயத்தை வன்முறையாகவும், வக்கிரமாகவும் மாற்றும் பாரதிய ஜனதா மற்றும் சங்க பரிவார்களின் முயற்சிகள் நாட்டை எங்கு தள்ளியது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது” என்று குறிப்பிட்டார்.