ஒவ்வொரு மாநில மொழியும் நாட்டின் அடையாளம் தான்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான்,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தானில் பாஜ உயர்நிலை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காணொலி மூலமாக பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: ஒன்றியத்தில் பதவியேற்று பாஜ அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்தனை வருடங்கள் தேசத்திற்கு சேவை செய்வதாகவும், ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் இந்த அரசு அமைந்து வருகிறது. உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது.  சேவை, நல்லாட்சி, ஏழைகளுக்கான நல திட்டங்கள் ஆகியவற்றுக்கு அரசு பாடுபட்டு வந்தது. சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு நிறைவு செய்யும் விதமாக இருந்தது. நாட்டின் சமச்சீரான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவற்றுக்கு 8 ஆண்டுகளும் அர்ப்பணிக்கப்பட்டது.   தாய்மார்கள், மகள்கள் மற்றும் சகோதரிகளின் அதிகாரமளித்தலுக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.   இழந்த நம்பிக்கையை 2014ல் நாட்டு மக்களிடையே பாஜ மீண்டும் விதைத்தது.  நாட்டு மக்கள் இப்போது பாஜவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். இவர்களிடம் தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும். பாஜ ஒவ்வொரு மாநில மொழியிலும்  கலாசாரத்தின் பிரதிபலிப்பை காண்கிறது.  தேசிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.