திருவண்ணாமலை: 5000 ஆண்டுகள் பழைமை; புதிய கற்கால மனிதர்கள் ஆயுதங்களைத் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி அடுத்த தேசூர் அருகே உள்ள ஆச்சமங்கலம் பகுதியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு கல் ஆயுதங்களைத் தீட்டிய இடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை நம்மிடையே பகிர்ந்துகொண்ட அந்த அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர்செல்வம், “குழுவின் நண்பர்களான பழனி, விஜயனுடன் நானும் இணைந்து தேசூர் அருகே உள்ள ஆச்சமங்கலம் பகுதியை ஒட்டிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டிருந்தோம். அப்போது, கீழ்நமண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள சிறு குன்று பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டோம். அங்கு சுனை ஒன்றும், அதன் அருகே சிறு சிறு குழிகளும் இருப்பதைக் கண்டறிந்தோம்.

ஆயுதங்களைத் தீட்டிய இடத்தில் ராஜ் பன்னீர்செல்வம்

அந்தக் குன்றின் சரிவுப் பகுதியில், மழைநீர் தேங்கும்படியான சில சுனைகள் காணப்பட்டதோடு, அதனைச் சுற்றி ஆங்காங்கே சிறு குழிகளும் தென்பட்டன. அந்தக் குழிகளை ஆய்வு செய்த போது, கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்களைக் கூர்மை அல்லது பட்டை தீட்டிய இடம் என்பது தெரியவந்தது.

அந்தக் குழிகள் யாவும், சிறு சிறு தொகுப்புகளாக ஆங்காங்கே காணப்படுகின்றன. கற்கால மனிதர்கள், தங்களுடைய ஆயுதங்களைத் தீட்டி கூர்மை செய்வதற்கு நீர் தேவைப்படும் என்பதால், நீரூற்று அல்லது நீர் தேங்கும் மலைப்பகுதிகளை மட்டுமே தேர்வு செய்வர். ஆகவே, நீர் தேங்கும் அளவிலான சுனைகளைக் கொண்ட இந்தக் குன்றைத் தேர்வு செய்து, அந்தச் சுனைகளை ஒட்டிய சமவெளிப் பரப்பில் தங்களுடைய ஆயுதங்களைக் கூர் தீட்டும் இடமாக உபயோகித்துள்ளனர். இந்தக் குன்றிலுள்ள சுனையைச் சுற்றிய மேற்பரப்பில், ஆங்காங்கே சிறு சிறு தொகுப்புகளாக 3 இடங்களில் ஆயுதங்களைப் பட்டை தீட்டிய குழிகள் காணப்படுகின்றன.

கல் ஆயுதம் தீட்டப்பட்ட இடம்

இக்குழிகள் யாவும் சராசரியாக 25 செ.மீ நீளமும், 8 செ.மீ அகலமும், 4 செ.மீ ஆழமும் கொண்டு காணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுப்புக்கும் சராசரியாக 5 குழிகள் வீதம், அந்த இடத்தில் மொத்தம் 15 குழிகள் சிதையாமல் இருந்ததைக் கண்டறிந்தோம்.

பொதுவாக, பழைய கற்கால மனிதர்கள் உபயோகித்த கருவிகள் யாவும் சொரசொரப்புடன் காட்சியளிக்கும். பின் வந்த புதிய கற்கால மனிதர்கள், அதனைச் சீர்செய்து வழவழப்புத் தன்மையுடன் மாற்றி உபயோகிக்கத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் நாடோடியாகவும், வேட்டைச் சமூகமாகவும் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் புதிய கற்காலத்தில் ஓரிடத்தில் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கினர். அதன்படி இந்த இடத்தில் காணப்படும் குழிகளை வைத்துப் பார்த்தால், புதிய கற்காலத்தில் இப்பகுதியில் ஒரு இனக்குழு வாழ்ந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது.

மலைக்குன்று

எனவே, இவையாவும் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதலாம். 5000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இப்பகுதியைத் தமிழகத் தொல்லியல் துறை முறைப்படி ஆவணம் செய்து பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க முன்வர வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.