பிரசாந்த் கிஷோருக்குப் போட்டி? – சுனில் கனுகோலுவை தேர்தல் பணிகளில் களமிறக்கிய காங்கிரஸ்!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக சுனில் கனுகோலு இடம்பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் பணிக்குழு பட்டியலில், சுனில் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர்கள்

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த மே 13-ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று நாள்கள் `காங்கிரஸ் சிந்தனை அமர்வு ‘ மாநாடு நடைபெற்றது. சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, ப.சிதம்பரம் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் 2024 தேர்தலுக்கான புதிய தேர்தல் வியூகங்கள் வகுப்பது, கட்சி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வது, ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி மட்டுமே வழங்குவது என பல்வேறு சீர்திருத்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக சில முக்கிய குழுக்களை உருவாக்கினார். குறிப்பாக, அரசியல் விவகாரங்கள் குழு (Political Affairs Group), டாஸ்க் ஃபோர்ஸ் எனும் 2024 தேர்தலுக்கான பணிக்குழு (Task force-2024), காங்கிரஸின் அகில இந்திய பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் மத்திய திட்டமிடல் குழு (Central Planning group for the coordination of the “Bharat Jodo Yatra”) ஆகிய மூன்று முக்கியக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

காங்கிரஸ் அறிக்கை

இந்த நிலையில், அந்தக் குழுக்களின் நிர்வாகிகள் அடங்கியப் பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கே.சி.வேணுகோபால் வெளியிட்டிருக்கிறார். அதில் காங்கிரஸ் விவகாரங்கள் குழுவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திக் விஜய் சிங், ஆனந்த் ஷர்மா, கே.சி.வேணுகோபால், ஜித்தேந்திர சிங் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

காங்கிரஸ் அறிக்கை

அதேபோல டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில் ப. சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலு பெயரும் இடம்பெற்றிருப்பது முக்கிய கவனம் பெற்றிருக்கிறது.

இந்த சுனில் கனுகோலு முன்னதாக, பிரசாந்த் கிஷோருடன் இணைந்து ஐ-பேக் டீமில் பணியாற்றிவந்தார். 2015-ல் பிரசாந்த் கிஷோருடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக ‘ஐ–பேக்’ நிறுவனத்திலிருந்து வெளியேறி, தனியாக `மைண்ட் ஷேர் அனல்டிக்ஸ்’ எனும் தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தை தொடங்கினார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்காக பணியாற்றியவர், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கான பணி செய்தார். இந்த நிலையில், தற்போது, 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்திருக்கிறார்.

சுனில் கனுகோலு

ஏற்கெனவே, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைமையுடன் தீவிர ஆலோசனை நடத்தியதுடன், தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். பின்னர், பல்வேறு காரணங்களால் அது கைக்கூடாமல் போகவும் தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் முன்னாள் கூட்டாளியான சுனில் கனுகோலு காங்கிரஸுடன் கைக்கோர்த்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.