கரூர்: “பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை. புரிந்துகொள்ளும் பக்குவமும் இல்லை. அதனால் தவறான பொய்த் தகவல்களை பரப்பி வருகின்றனர்” என்று அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
கரூர் அருகேயுள்ள பஞ்சமாதேவியில் இன்று மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியது: ”பொய் பேசுபவர்கள் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு வரி, மத்திய, மாநில விகிதாச்சார வரி உள்ளது. இதில் மத்திய, மாநில அரசு விகிதாச்சார வரியை குறைத்துள்ளது.
இதில் மாநிலத்திற்கு 55 சதவீத வரி குறைந்துள்ளது. அதனை மறைத்தும், மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை. புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை. அதனால் தவறான பொய்த் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 75 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூ.7.88 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இலவச மின் இணைப்புக்கு காத்திருந்த 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. நிகழாண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது” என்றார்.