புதுடெல்லி: ‘அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டனர்’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.டெல்லியில், ‘பாரத் டிரோன் மகோத்சவ்’ என்ற பெயரில் நாட்டின் மிகப்பெரிய டிரோன் திருவிழா நேற்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:முந்தைய அரசாங்கங்கள், தொழில்நுட்பத்தை பிரச்னையின் ஒரு பகுதியாக பார்த்தன. இதை ஏழைகளுக்கு எதிரானவை என முத்திரை குத்த முயற்சிகள் செய்தன. இதன் காரணமாக, 2014ம் ஆண்டுக்கு முன்பாக அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அலட்சிய போக்கு இருந்தது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நல்லாட்சிக்காக ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’, ‘எளிதாக வாழ்தல்’, ‘எளிதாக தொழில் தொடங்குதல்’ போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தோம். அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பெருமளவு பயன்படுத்திக் கொண்டதன் மூலம், இவை நாட்டின் தொலைதூரத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்துள்ளன. இதற்கு பிரதம மந்திரி சுவாமித்வா யோஜனா திட்டம் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சொத்தும் டிஜிட்டல் முறையில் வரைபடமாக்கப்பட்டு, டிஜிட்டல் சொத்து அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவில் டிரோன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மேலும் விவசாயம், விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளிலும் டிரோன்களின் பயன்பாடு அதிகரிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.நினைவில் நிற்கும் பயணம்சென்னையில் நேற்று முன்தினம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் திட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்ற பிரதமர் மோடி, டெல்லி திரும்பிய பிறகு தனது பயணம் பற்றிய டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘நன்றி தமிழ்நாடு. எனது நேற்றைய தமிழ்நாடு பயணம் என்றும் நினைவில் நிற்கக் கூடியது,’ என்று கூறியுள்ளார்.
