“மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி…” – சிலை திறப்பு விழாவில் வெங்கைய நாயுடு

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை நிறுவப்படும் என கடந்த மாதம் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, 1.7 கோடி ரூபாய் மதிப்பில் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கலச்சிலை 12 அடி உயர பீடத்தில் உருவாக்கப்பட்டு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அதைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த சிலை திறப்பு விழாவில் வரவேற்புரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,“ஒருபக்கம் இது மகிழ்ச்சியான நாள். மறுபக்கம் அந்த சிலையை பார்த்தப்போது உள்ளம் உருகி விட்டது. நம்மிடம் கலைஞர் பேசுவது போல் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

துரை முருகன்

காமராஜர் பெரியார் அண்ணா சிலைகளை தொடர்ந்து கலைஞர் சிலை அமைந்துள்ளது. கலைஞர் சிலை இங்கே ஏன் இருக்க வேண்டும் என சிந்தித்து முடிவு எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவை நடப்பதற்காக ஒரு மகத்தான கட்டடத்தை எழுப்பியவர் கலைஞர் கருணாநிதி. ஆனால் கடைசி நேரத்தில் அது கை கூடாமல் போய் விட்டது. இப்போது சிலை அங்கேயே நிறுவப்பட்டுள்ளது” என பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கைய நாயுடு தான்” என்றார்.

முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, “கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் இளம் வயதில் கலைஞர் கருணாநிதியின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. இந்தியாவின் பெருமைமிக்க முதலமைச்சர்களில் அவரும் ஒருவர். நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர்.

பன்முகத்தன்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல்கள் நிறைந்தவர் கருணாநிதி. என்னுடைய பொது வாழ்வில் கலைஞர் கருணாநிதியுடன் உறவு மறக்க முடியாதது… இனிமையானது.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

– என்ற குறளுக்கு பொருத்தமானவர் கருணாநிதி.

மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்கவேண்டும். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். தாய்மொழி, தாய்நாடு ஆகியவை மிகவும் முக்கியமானது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயலாற்ற வேண்டும். முதலில் நாம் அனைவரும் இந்தியர்கள்.

மக்களை நடுநாயகமாக கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கலைஞர் கருணாநிதி. தாய்மொழி மிகவும் முக்கியமானது. அனைவரும் தாய்மொழியில் பேசுங்கள். தாய்நாடு, தாய்மொழி என்பது அடிப்படையானது. கலைஞர் தமிழ் மொழியை ஊக்குவித்தார். தமிழ் இலக்கியங்களை ஊக்குவித்தார் என்பதாலே நான் அவரை நினைத்து பெருமை கொள்வேன்.

மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி.

எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. தாய்மொழி என்பது தான் முதன்மையாக இருக்க வேண்டும். இளைஞர்கள் தாய்மொழியை அன்றாடம் பேசவேண்டும். தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தும். எந்த மொழியையும் எதிர்க்காவிட்டாலும், தாய்மொழியை ஆதரிப்பேன். நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. எனது மொழிக்கு ஆதரவானவன். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அதனை அங்கீகரிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியா” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.