மும்பை: குறிப்பிட்ட வகுப்பினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக பாஜக பெண் செய்தி தொடர்பாளர் நூபர் ஷர்மா மீது மும்பை போலீசார் வழக்குபதிந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலில் அளித்த பேட்டி தொடர்பாக, பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் குறிப்பிட்ட வகுப்பினரை அவதூறு செய்யும் வகையில், அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இவரது பேச்சுக்கு கண்டனம் ெதரிவித்து சிலர் அவருக்கு கொலை, பாலியல் மிரட்டல்கள் விடுத்துள்ளனர். அதிர்ச்சியடைந்த நூபுர் ஷர்மா, இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், குறிப்பிட்ட வகுப்பினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி நூபுர் ஷர்மா மீது மும்பை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இர்பான் ஷேக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பைடோனி போலீசார் நூபர் ஷர்மாவுக்கு எதிராக 295ஏ, 153ஏ, 505(2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
