புதுடெல்லி: தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட 10 பழங்கால பொருட்கள் மற்றும் சிலைகளை தமிழக அரசிடம் மத்திய அரசு விரைவில் ஒப்படைக்க உள்ளது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால பொருட்கள் மற்றும் சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது அந்த பழங்கால அரிய பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். அதன்படி பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது 10 பழங்கால பொருட்கள் அந்தந்த மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட 10 பழங்கால பொருட்கள் மற்றும் சிலைகளை வரும் வாரத்தில் தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 10 புராதன பொருட்களில் 4 ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த 2020-2022 ஆண்டுகளிலும் 6 பொருட்கள் அமெரிக்காவில் இருந்து கடந்த ஆண்டும் மீட்கப்பட்டவை என அதிகாரிகள் கூறினர்.
வரும் வாரம் டெல்லியில் நடைபெறும் விழாவுக்கான அழைப்பிதழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த சிலைகள் மற்றும் பழங்கால பொருட்கள் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு அவை இருந்த இடத்தில் மீண்டும் வைக்கப்படும்.
இந்த சிலைகளில் குறிப்பிடத்தக்கது துவாரபாலர் சிலையாகும். ஆஸ்திரேலியாவில் இருந்து 2020-ம் ஆண்டு மீட்கப்பட்ட இது ஒரு கற்சிலை. இது, 15-16-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர வம்சத்தை சேர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து 1994-ல் திருடப்பட்டது. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை, நெல்லை நரசிங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து திருடப்பட்ட கங்காள மூர்த்தி சிலை உள்ளிட்டவையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.