மும்பை: மின்சாரம், சிமெண்ட், சுரங்கங்கள், துறைமுகங்கள் என்று பல துறைகளில் கால் பதித்த அதானி குழுமம், தற்போது ஏர் ஒர்க்ஸ், ட்ரோன் தொழிலிலும் கால் பதிக்கிறது. அதனால், 2 நிறுவனங்களின் பங்குகளை சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதானி குழும நிறுவனமானது மின்சாரம், சிமெண்ட், ட்ரோன்கள், உணவு, சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற துறைகளில் கால் பதித்துள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 102 பில்லியன் டாலர் என்றும், அவர் உலகின் ஏழாவது பணக்காரர் என்றும் கூறியுள்ளது. அதானி குழுமமானது, இந்தியாவின் ஏழு பெரிய விமான நிலையங்களை (அகமதாபாத், லக்னோ, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், கவுகாத்தி, மங்களூரு, மும்பை) இயக்கி வருகிறது. இந்நிறுவனம் விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மும்பையில் 71 ஆண்டுகளாக செயல்படும் விமான சேவை நிறுவனமான ஏர் ஒர்க்ஸ் குழுமத்தின் பங்குகளை, அதானி குழுமம் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஏர் ஒர்க்ஸ் நிறுவனமானது விமான நிறுவனங்களான இண்டிகோ, கோயர் மற்றும் விஸ்தாரா போன்ற இந்திய விமான நிறுவனங்களுக்கும், லுஃப்தான்சா, துருக்கிய ஏர்லைன்ஸ், ஃப்ளைடுபாய், எதிஹாட், விர்ஜின் அட்லாண்டிக் போன்ற வெளிநாட்டு விமானங்களுக்கும் ஏர் ஒர்க்ஸ் சேவை செய்கிறது. இதனுடன், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பட்டியலில் இந்திய கடற்படையின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், இந்நிறுவனம் இந்திய கடற்படையின் மூன்று பி-81 நீண்ட தூர கடல் ரோந்து விமானங்களை பராமரிப்பதற்காக விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏர் ஒர்க்ஸ் குழுமத்தின் வணிகமானது, 27க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவியுள்ளது. தற்போது, 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்துறையில் வேலை செய்கின்றன. இதில் அரசு நிறுவனமான ஏI இன்ஜினியரிங் சர்வீஸ் மற்றும் ஜிஎம்ஆர் டெக்னிக் ஆகியனவும் அடங்கும். இதுமட்டுமின்றி பெங்களூருவைச் சேர்ந்த ட்ரோன் தயாரிப்பாளரான ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை அதானி டிஃபென்ஸ் சமீபத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
