இப்படியும் நடந்ததா? – Tamam Shud case: அமானுஷ்யமான முறையில் இறந்த மனிதர்; காரணம் கண்டறியப்பட்டதா?

சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நம்புவதற்கு கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும், விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இதன் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

1948 நவம்பர் 30 அன்று நகை வியாபாரி ஜான் பெயின் என்பவரும் அவர் மனைவியும் ஆஸ்திரேலியாவின் தென்மேற்குப் புறமுள்ள அடிலெய்டு நகரிலுள்ள சோமர்டன் பூங்கா கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் படுத்திருந்ததைக் கண்டனர். மிகவும் நாகரீகமான உடையை அணிந்து கொண்டிருந்த அந்த மனிதனின் தலை கடல் சுவரின் மீது சாய்ந்தவாறு இருந்தது (கடலலை நகருக்குள் நுழைந்து விடாமல் தடுக்க ஆங்காங்கே சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தன). அவர் இறந்துவிட்டாரோ என்ற சந்தேகமும் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அவரது வலது கை திடீரென்று மேற்புறம் எழுந்தது. பிறகு மீண்டும் மணலில் விழுந்தது. அவர் குடித்த நிலையில் இருந்திருக்க வேண்டுமென்று அந்த தம்பதி முடிவு செய்தனர். தங்கள் நடைபயிற்சியைத் தொடர்ந்தனர்.

மர்ம மனிதனின் உடல் காணப்பட்ட இடம்

அதற்கு அடுத்த அரை மணி நேரத்தில் வேறொரு தம்பதியும் அந்த மனிதரைக் கண்டனர். அவரது மிக நாகரீகமான உடை அவர்கள் கவனத்தை ஈர்த்தது. முக்கியமாக பளபளவென்று மின்னிய அவரது ஷூக்கள்! கடற்கரைக்கு வருபவர்கள் அதுபோன்ற காலணிகளை அணிய மாட்டார்கள் என்பதால் அது அவர்களை யோசிக்க வைத்தது. அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைத்தனர். அவர் முகத்தில் சில கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.

அடுத்த நாள் அதிகாலை அந்த மனிதன் பிணமாகக் காணப்பட்டான். உடனடியாகக் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டார்கள். கால்கள் அகன்ற நிலையில் காணப்பட்ட அந்த மனிதனின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது போல் இருந்தது.

அன்று அதிகாலை இரண்டு மணிக்கு அவன் இறந்திருக்க வேண்டுமென்று மருத்துவர் கூறினார். மாரடைப்பு காரணம் என்று கூறினாலும் அ​தில் சந்தேகத்தையும் எழுப்பினார்.

இறந்தவனின் ஆடுகால் தசைகள் மிகப்பெரியதாக இருந்தன. நாற்பது வயதைத் தாண்டியவன் என்று கணிக்கப்பட்ட அவனது கால்கள் தடகள வீரனைப் போல உறுதியாக இருந்தன. அவன் உடலில் மிகச்சிறிய அளவில் காணப்பட்ட விஷம் சோமாலி பூர்வ குடிமக்கள் தங்கள் அம்புகளில் பயன்படுத்தும் விஷம் போல இருந்ததாம்.

மர்ம மனிதன்

அவனது பாக்கெட்டில் இருந்த பொருள்கள் வெளியே எடுக்கப்பட்டன. அவனது கோட்டில் ஒரு முழுமையான சிகரெட் காணப்பட்டது. அமெரிக்காவில் தயாரான ஓர் அலுமினியம் சீப்பும், பயன்படுத்தப்படாத ஒரு பேருந்து கட்டணச் சீட்டும் கூட காணப்பட்டன.

ஆனால் பர்ஸ், அடையாள அட்டை, ரொக்கப் பணம் என்று எதையும் காணோம். ஒரு பாக்கெட் மிக வித்தியாசமான ஆரஞ்சு நிற நூலால் தைக்கப்பட்டிருந்தது.

அந்த மனிதனின் ட்ரவுசரின் உட்புற பாக்கெட்டில் ஒரு சிறு தாள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ‘டமாம் ஷுட்’ (Tamam Shud) என்ற வார்த்தைகள் காணப்பட்டன. இந்த பாரசீக வார்த்தைகளுக்கு ‘முடிந்துவிட்டது’ என்று பொருள். உமர் கய்யாமின் ரூபாயத் என்ற நூலின் இறுதிப் பக்கத்திலிருந்து கிழிக்கப்பட்டு இருந்தது இந்த சிறு தாள்.

Tamam Shud

பல நூலகங்களில் அந்த நூலின் பல வெளியீடுகள் தேடப்பட்டு கடைசியில் ஒரு குறிப்பிட்ட அச்சகத்தாரான் வெளி​யீட்டில் அதேபோன்ற எழுத்துகள் அச்சு மாறாமல் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

முதலில் ஆஸ்திரேலியா முழுவதும் அவனது கைரேகை அனுப்பப்பட்டது. எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அடிலெய்டு ரயில்வே நிலையத்தில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த ஒரு பழுப்பு நிற சூட்கேஸில் அனது கை ரேகை காணப்பட்டது. அந்த ஆரஞ்சு நிற நூல் கண்டு ஒன்றும் இருந்தது.

சூட்கேஸில் கிடைத்த பொருள்கள்

கிழிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தையும் அதில் கண்டுபிடித்தனர் காவல்துறையினர். அதன் அட்டையின் உட்புறத்தில் ஒரு உள்ளூர் தொலைபேசி எண்ணும், எந்த நாட்டின் எண் என்றே கண்டுபிடிக்க முடியாத ஒரு தொலைபேசி எண்ணும், ரகசியமான சில எழுத்துகளும் எழுதப்பட்டிருந்தன. இதை வைத்துக்கொண்டு இறந்தவர் யார் என்றோ அவன் எப்படி இறந்தான் என்றோ கண்டுபிடிக்க முடியவில்லை.

இதை ஆஸ்திரேலியாவின் மிக மர்மமான வழக்குகளில் ஒன்று என்று கூறியது அந்த நாட்டின் காவல்துறை விசாரணை. பல காரணங்களினால் பொதுமக்களுக்கும் இந்த வழக்கின் மீது மிகுந்த சுவாரஸ்யம் ஏற்பட்டது. அவர்கள் இதை அமானுஷ்ய வழக்கு என்றே குறிப்பிடத் தொடங்கினர்.

ரகசிய எழுத்துகள்

காரணம் அப்போது உலகப் போர் உச்சநிலையை அடைந்திருந்தது. புத்தகத்தில் இருந்த சங்கேத வார்த்தைகளை ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக விளக்கிக் கொண்டிருந்தார்கள். மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷம் இறந்தவரின் உடலில் செலுத்தப்பட்டது என்றொரு வதந்தி பரவியிருந்தது. இறந்தவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாதது ஆஸ்திரேலிய காவல்துறைக்கு ஒரு தலைகுனிவு என்று கூறிக் கொண்டிருந்தார்கள் மக்கள்.

அதற்கு அடுத்த சில வருடங்களில் இந்த வழக்கு உலக அளவில் கவனம் பெற்றது. காரணம் பல நாடுகளுக்கு இறந்தவரின் அடையாளங்களை அனுப்பி அவன் அந்த நாடுகளைச் சேர்ந்தவனா என்று கேட்கப்பட்டது. அவனுடைய விரல் ரேகைகளும் அனுப்பப்பட்டன.

தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்த பிறகு, டி.என்.ஏ.வைக் கொண்டு ஒரு மனிதனின் அடையாளத்தை எளிதில் அடையாளம் காண முடியும். ஆனால் இன்றளவும் அவனது உடல் அடையாளம் காணப்படவில்லை என்பதும் அவனுக்கு நேர்ந்தது கொலையா தற்கொலையா என்பது ​தீர்மானிக்கப்படாததன் காரணமாகவும் மர்மம் அதிகரித்திருத்தது.

மர்ம மனிதனுக்கு இறுதி மரியாதை

இந்த நிலையில் அந்த உடல் அழுகத் தொடங்கியது. உடலைப் புதைக்கத் தீர்மானித்தனர். எனினும் எச்சரிக்கையாக அந்த உடலை பதனிடச் (‘எம்பாம்’) செய்தனர். பின்னர் அந்த உடல் தேவைப்படலாம் எனும் அனுமானத்தில், அதை எரிக்காமல் புதைத்தனர்.

இறந்தவனின் ​​நூலில் எழுதப்பட்டிருந்த உள்ளூர் தொலைபேசி எண் ஒரு செவிலியுடையது. அவர் பெயர் இறுதிவரை வெளியிடப்படவில்லை. ஜெஸ்டின் என்ற புனைப்பெயரில்தான் அவர் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டார்.

இறுதியில் ஆஸ்திரேலியாவின் மருத்துவக் குழு தலைவர் ‘இறந்தவர் யார் என்று என்னால் கூற முடியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்பதையும் என்னால் கூற முடியவில்லை’ என்று குறிப்பிட, அதோடு அந்த வழக்கு அதிகாரபூர்வமாக (மட்டும்) ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் இன்னமும் கூட அது பற்றிய பலவித யூகங்கள் பரவிக்கொண்டே இருக்கின்றன. அவை இரண்டாம் உலகப்போர் தொடர்பானதாக உள்ளன.

செவிலியர் ஜெஸ்டின்

அந்த செவிலிக்கும் இறந்தவனுக்கும் தொடர்பு உண்டு என்றும் அவர்களின் குழந்தையை அவள் அவனுக்குக் காட்டாததால் தற்கொலை செய்து கொண்டான் என்றும் கூறுகிறார்கள். மிக மிக அரிதான விஷம் அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை.

– மர்ம சரித்திரம் தொடரும்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.