கட்டாத நீச்சல் குளம்; இல்லாத தோட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு? திருச்சி மாநகராட்சி கொந்தளிப்பு

Fund allocation for water pool not constructed Trichy corporation fires out: திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் மற்றும் 2022 -23 பட்ஜெட் விவாதக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூடத்தில்  நடந்தது.இதில் புதிய மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், துணை மேயர் திவ்யா உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற விவாதம் வருமாறு;-

மதிவாணன் மண்டல குழு தலைவர் பேசுகையில் ;-பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவுபடுத்த தாங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை, அனைத்து வார்டுகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முன்னாள் மேயரும், திருச்சி 3 1-வது வார்டு உறுப்பினருமான  சுஜாதா( காங்கிரஸ்) பேசுகையில்: மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளில் பிரதானமாக இரட்டை வாய்க்காலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் பட்ஜெட்டில் திருச்சி மாநகராட்சியில் உள்ள நீச்சல் குளங்கள், கலையரங்கம், பூங்கா, தோட்டம் பராமரிப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி மாநகராட்சியில் எனக்குத் தெரிஞ்சு நீச்சல் குளங்கள் இல்லை, மேலும் பூங்காக்கள்- தோட்டங்கள் இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. தோட்டங்கள் மாநகராட்சிக்கு எங்கே என்று தெரியவும் இல்லை. இந்த அவசர பட்ஜெட் தாக்கலுக்கு முன் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு ஆலோசனையை நடத்தி இருக்கலாமே! அப்படி என்ன அவசரம் மாநகராட்சி பட்ஜெட் மக்களுக்கு என்று சரமாரியான கேள்விகளை மேயரைப் பார்த்து தொடுத்தார்.

 ஜவகர் (காங்கிரஸ்) பேசுகையில்: திருச்சி மாநகராட்சியில் இருக்கக் கூடிய ஓர் ஆசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி வகுப்புகளைக் கொண்டு வந்தால் அடித்தட்டு மக்கள் பயனடைவார்கள்.

அம்பிகாபதி (அதிமுக) பேசுகையில்: திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெருக்கடி அதிகமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து உயர்மட்ட பாலங்கள் கொண்டுவர வேண்டும்.

திருச்சி மாநகராட்சியில் அமைச்சர் கே.என்.நேரு தொகுதியான  மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் கூடுதல் திட்டப்பணிகள் செயல்படுத்தப் படுகின்றன. அதேபோன்று திருச்சி கிழக்கு, திருவெரும்பூர், ஸ்ரீரங்கம் தொகுதிகளில் திட்டப்பணிகள் செயல்படுத்தப் படவில்லை என்றார்.

இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், நாகராஜ் மற்றும் பலர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதுகுறித்து மேயர் அன்பழகன் பதிலளிக்கும்போது:அதிமுக மேயராக இருந்தபோது எதிர்கட்சி கவுன்சிலர்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கட்சிப் பாகுபாடு இல்லாமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்த பட்ஜெட்டில் அனைத்து வார்டுகளுக்கும் தலா ரூ.50 லட்சம் நிதி சீராக ஒதுக்கப்பட்டுள்ளது. எழுதிக் கொடுத்ததை இங்கே வந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள் என்றார்.

இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், அனுசியா ஆகியோர் தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.