மது போதையில் சப்பாத்தி கேட்டு தகராறு… லாரி ஏற்றி இருவரைக் கொன்ற வடமாநில நபர்!

சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் சொந்தமாக லாரி பார்க்கிங் யார்டு நடத்தி வந்தார். வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன், நவீன், வடகரை பகுதியைச் சேர்ந்த குமரன் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் லாரி பார்க்கிங் உள்ளே நேற்றிரவு சென்றனர்.

கொலை

பின்னர் அங்கு நின்றிருந்த வடமாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்றின் பின்புறத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மூன்று பேரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மதுபோதையில் லாரி டிரைவரிடம் சப்பாத்தி கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால் லாரி டிரைவருக்கும் கமலகண்ணன், நவீன், குமரன் ஆகியோருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் மூன்று பேரும் சேர்ந்து லாரி டிரைவரைத் தாக்கியுள்ளனர்.

அதனால் ஆத்திரமடைந்த உ.பி-யைச் சேர்ந்த லாரி டிரைவர் கண்ணையா லால்சிங், லாரியில் ஏறினார். பிறகு லாரியை பின்பக்கமாக ஓட்டினார். அதை சற்றும் எதிர்பாரத மூன்று பேரும் லாரி சக்கரத்தில் சிக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே கமலக்கண்ணன் உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த நவீன், குமரன் ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அங்குள்ளவர்கள் அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குமரன் உயிரிழந்தார். நவீன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த செங்குன்றம் போலீஸார், சடலங்களை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், கண்ணையா லால் சிங்கை கைது செய்தனர். இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை சேதப்படுத்தினர். தகவலறிந்த ஆவடி துணை கமிஷனர் மகேஷ் தலைமையில், செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசன், மணலி உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கொடிராஜ் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.