“அண்ணாமலை கர்நாடகா சென்று மேகேதாட்டு அணையைக் கட்ட விடாமல் தடுப்பாரா?” – அன்புமணி கேள்வி

சேலம்: “மத்தியிலும் கர்நாடகாவிலும் பாஜகதான் ஆட்சி செய்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று மேகேதாட்டு அணைக்கட்டும் திட்டம் கொண்டுவர மாட்டோம் என்று சொல்வாரா, அணையை கட்ட விடாமல் தடுத்து நிறுத்துவாரா?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாமக 2.0 என்ற புதிய செயல் திட்டத்தின் மூலம் கல்வி, மேலாண்மை, சுற்றுச்சூழல், மது ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி கட்சியை வழி நடத்துவேன். சேலத்தில் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 20 ஆண்டுகளாக மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆண்டுதோறும் 40 டிஎம்சி-யில் இருந்து 120 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. கடந்த ஆட்சி காலத்தில் சிறிய அளவில் செயல்படுத்தப்பட்ட காவிரி உபரிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.

தமிழகத்தில் மது, போதைப் பொருட்கள், ஆன்லைன் மோசடி என மும்முனைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் 50 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. எனவே, நீண்ட ஆண்டுகளாக பயன்படுத்தாத நிலத்தை அவர்களுக்கு திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என தெரிவித்தார்கள். அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமெனில், உடனடியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘நீட் ’ தேர்வு கொண்டு வந்ததின் நோக்கமே கல்வி வியாபாரமாகக் கூடாது என்பதே. ஆனால், இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பயிற்சி நிறுவனங்கள் மூலம் மோசடி நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் என கல்வி வணிகமாக்கப்பட்டது. நீட் தேர்வு வந்த பிறகும் தகுதியற்ற நபர்கள் கூட மருத்துவம் படிக்கும் அவலம் நிலவி வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் தமிழகத்தில் கல்வி கட்டமைப்பை உருவாக்கவில்லை. அதனால், சிறிது காலம் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

ஆளுநருக்கும் முதல்வருக்கும் சுமுக உறவு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நிர்வாகம் சீராக இருக்கும். அதில் இருவரும் அரசியல் செய்யக் கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும்.

கடந்த மூன்று மாதத்துக்கு முன்பிருந்து 2.0 திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். முதல்கட்டமாக கட்சியில் மறுசீரமைப்பு செய்து வருகிறேன். அதன்பின்னர், எங்களின் இலக்கு 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாமக ஆட்சி அமைப்பது.

இந்தியாவில் பெரிய கட்சி பாஜக. ஆனால், தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சி. தமிழகத்திற்கு சாபக்கேடாக அமைந்துள்ள மேகேதாட்டு அணையை எக்காரணம் கொண்டும் கட்டவிடமாட்டோம்.

மத்தியிலும், கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் கொண்டு வர மாட்டோம் என்று சொல்வாரா? அணை கட்டவிடாமல் தடுத்து நிறுத்துவாரா?

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாமகதான்; பாஜக கிடையாது. திமுகவுக்கு பாஜக எதிர்கட்சி கிடையாது. உண்மையான எதிர்க்கட்சி பாமகதான்.

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்றுவார்கள் என நம்பி திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால், அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் நிதியமைச்சர் வெளிப்படையாக ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருப்பது கவலையளிக்கிறது” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.