“என் நிழல்ல வளர்ற குட்டைச் செடி நீ!” – பாஜக-வை விளாசிய சீமான்

2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க.,வினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் நடந்தது. இதுசம்பந்தமான வழக்கு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நீதிமன்றம் 6-ல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருச்சிக்கு வந்தார்.

வழக்கு விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தின் வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான். “சவுக்கு சங்கர், மாரிதாஸ், கார்த்திக் கோபிநாத் போன்றோருக்கென கருத்துகள் பார்வைகள் இருக்கு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது நாங்கள் ஜனநாயகத்தின் காவலர்கள், கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்றெல்லாம் பேசியிருக்கீங்களே!சென்னையில் 20 நாள்ல 18 கொலை விழுந்துருக்கு. ஆனாலும், முதல்வர் நாட்டுல சட்டம் ஒழுங்கு அருமையாக இருக்குன்னு சொல்றாரு. அதெல்லாம் குண்டாஸ்ல வருமா, இல்ல பேசுறதும் குண்டாஸ்ல வருமா!… கருத்தை கருத்தாக எதிர்கொள்ள கற்றுக் கொள்வது தான் ஜனநாயகம். சவுக்கு சங்கர் ஒரு கருத்து சொல்றாருன்னா, நீங்க தான் நிறைய சங்கரை வச்சிருக்கீங்க. அவருக்கு எதிரா ஒரு கருத்து சொல்லுங்க. அத விட்டுட்டு தூக்கி கைது பண்ணி உள்ள போடுன்னு சொன்னா என்ன அர்த்தம். எந்த வினைக்கும் எதிர்வினை இருக்கு ராஜா. இந்த உலகத்தில் எதுவும் நிலைத்து இருந்ததில்லை. அதிகாரத்தைக் கைப்பற்ற நோக்கம் தான் முக்கியம். நான் என் பாதையில் தெளிவாகவும், பயணத்தில் உறுதியாகவும் இருக்கேன்” என்றார்.

சீமான்

தொடர்ந்து பேசியவர், “பேரறிவாளன் நிரபராதி இல்லை எனச் சொல்லும் அண்ணாமலை, அமித் ஷாவுக்கும், மோடிக்கும் குஜராத் கலவரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என இதே நாட்டின் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எப்படி பார்க்கிறார்!… 8 ஆண்டு ஆயிடுச்சி மோடி ஆட்சிக்கு வந்து. என்னை மாதிரி ஒருதடவை மோடியை ஊடகவியலாளர்களை சந்திக்கச் சொல்லுங்க. லஞ்ச ஊழலைப் பத்தி பேசும் பா.ஜ.க., ரஃபேல் விமான ஊழல், பண மதிப்பிழப்பில் சாதிச்சது என்ன? தீவிரவாதம் ஒழிஞ்சிடும்னு சொன்னீங்க, அப்படின்னா புல்வாமா மாவட்டத்துல எப்படி தாக்குதல் நடந்துச்சின்னு பேசுங்க. ‘500 கோடி கைமாறிய பிறகு தான் என்னைய பி.ஜே.பி ஆட்சி வெளிய விட்டுச்சி’ன்னு நீரவ் மோடி சொன்னாரே அதுக்கு பதில் என்ன?.. நீட், புதிய கல்விக் கொள்கை பத்தியும் பேசி பதில் சொல்லுங்க. இந்த நாட்டுல அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், காவலர்கள் என தேர்வு வச்சி தானே எல்லாரையும் தேர்ந்தெடுக்குறோம். இவங்களை நிர்வாகம் பண்ணுற தலைவன் என்ன தேர்வு எழுதுறான். எல்லாத்துக்கும் தேர்வு எழுதச் சொல்ற நீங்க ஏன் தேர்வை எழுதுறதில்ல. மோடி, அமித் ஷா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி எழுதட்டும். கல்வி, மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், வரலாறு, வேளாண்மை, உலக வரலாறு, உலக அரசியல் சேர்த்து ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் தேர்வை நடத்தி எவர் தேர்ச்சி பெற்று வருகிறாரோ அவர்கிட்ட நாட்டை கொடுங்க. அப்பவாவது நம்மை ஒரு அறிவார்ந்த பெருந்தகை, தகுதியான தலைவர் நாட்டை ஆள்றாரு’னு நாங்க நினைச்சுக்கிறோம்” எனக் கொதித்தார்.

சீமான்

‘தமிழகத்தில் பா.ஜ.க., தான் மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே’ என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “சொல்லிக்க வேண்டியது தான். நீங்க பெரிய வளர்ந்துக்கிட்டு இருக்க கொம்பாதி கொம்பர் தானே. 2024 தேர்தல்ல ஒன்னு ஸ்டாலின் பின்னாடி நிப்பீங்க, இல்லைன்னா எடப்பாடி பழனிசாமி பின்னாடி நிப்பீங்க. என் மரத்துக்குக் கீழ, என் நிழல்ல வளர்ற குட்டைச் செடி நீ!… அப்புறம் எதுக்கு குதிக்கிற. என்னை மாதிரி தனிச்சு போட்டியிடுங்க பார்ப்போம். தி.மு.க., அ.தி.மு.க.,வை விட்றுவோம். பா.ஜ.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி தனியா போட்டியிடுவோம். யார் முந்துறான்னு பார்ப்போமா!…” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.