கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்டு திகைப்பு – காரில் இருந்து இறங்க மறுத்த கே.கே

இசை நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரியத்திற்கு வெளியே கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கண்டு திகைத்த மறைந்த பாடகர் கே.கே., காரை விட்டு இறங்க மறுத்ததாக, அவருக்கு முன்னதாக நடந்த இசை நிகழ்ச்சியில் பாடிய பாடகி தெரிவித்துள்ளார்.

53 வயதான கே.கே. என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், கடந்த 31-ம் தேதியன்று கொல்கத்தா நஸ்ரூல் மஞ்சாவில் கல்லூரி சார்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ஓட்டல் அறைக்கு திரும்பிய அவர், அங்கு மயங்கி விழுந்ததையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கே.கே.வின் உடல் உடற்கூராய்வுக்குப் பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் கே.கே.வின் உடல் மும்பை கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கே.கே.வின் திடீர் உயிரிழப்பு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கே.கே.வின் முகத்திலும், தலையிலும் காயங்கள் இருந்ததால், கொல்கத்தா காவல்துறை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகளவில் இருந்த விளக்குகளை அணைக்குமாறும், மிகவும் வியர்த்துக்கொண்டே இருந்ததால், ஏசியை அடிக்கடி ஆன் செய்யுமாறும் கூறியதாகவும், 2,500 பேர் மட்டுமே அமரக்கூடிய ஆடிட்டோரியத்தில் 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்ததாகவும், ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து குற்றஞ்சாட்டினர்.

image

இதற்கிடையில், கே.கே.வின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர், “கே.கே.வின் இதயத்தின் இடதுபுற பிரதான ரத்தக் குழாயில், 80 சதவிகித அடைப்புகள் இருந்தன. அது தவிர, பல்வேறு ரத்தக் குழாய்களில் சிறிய அடைப்புகள் இருந்தன. அவருக்கு இதய நோய் இருந்துள்ளது. அதற்கு, சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்துள்ளார்.

நிகழ்ச்சியின்போது, அவர் மேடையில் தொடர்ந்து நடந்தபடியும், நடனமாடியும் இருக்கிறார். கூட்டத்தின் ஆரவாரத்தால், அவர் உணர்ச்சிவயப்பட்டு இருக்கக்கூடும். அதனால், இதயத்தில் திடீரென ரத்த ஓட்டம் சிறிது நேரத்திற்கு தடைபட்டு, ஒழுங்கற்ற இதய துடிப்பை உண்டாக்கி, பின் மாரடைப்பை ஏற்படுத்தி இருக்கும். அவர் மயங்கி விழுந்த உடனேயே, சி.பி.ஆர்., எனப்படும் இதயம் மற்றும் நுரையீரலை மீண்டும் இயங்கச் செய்யும் அவசர உதவி சிகிச்சையை செய்து இருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்கக் கூடும். அவர், வாயு தொல்லைக்கான மருந்துகளை உட்கொண்டு இருந்தது, உடற்கூராய்வில் தெரியவந்தது.

image

அவருக்கு, இதயத்தில் ஏற்கனவே வலி இருந்து, அதை வாயுத் தொல்லை என அவர் தவறாக நினைத்து மருந்து எடுத்திருக்கக்கூடும்” என்று கூறினார். இந்நிலையில், பாடகியான சுபலக்ஷ்மி தே அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ஆடிட்டோரியத்திற்கு வெளியே இருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்ததும், மறைந்த பாடகர் கே.கே. காரை விட்டு இறங்க விரும்பவில்லை. கே.கே. வந்த நேரத்தில் ஆடிட்டோரியத்திற்கு வெளியே கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணிக்கு கே.கே வந்தார். முதலில் கூட்டத்தை பார்த்ததும் ‘நான் காரை விட்டு இறங்கமாட்டேன்’ என்று தெரிவித்தார்.

அன்று ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. அவருடைய கிரீன் ரூமிற்கு வெளியில் இருந்து யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர், என்னிடம் இரண்டு நிமிடங்கள் பேசினார். அப்போது அவரது உடல்நிலை சரியாகத்தான் இருந்தது. நானும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டேன். அப்போது அவரது உடல்நிலையில், எந்த அசௌகரியமும் தோன்றியதாக எனக்கு தெரியவில்லை.

கே.கே தனது நிகழ்ச்சியின் நடுவில் மேடை விளக்குகளை அணைக்குமாறு மேடை அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார். ஹாலில் கூட்டம் அதிகமாக இருந்தால் நமக்கு வியர்த்துவிடும். ஒருமுறை மேடை விளக்கை அணைக்கச் சொன்னார். ஆனால், அவருக்குப் பதற்றமாக இருப்பதாகச் சொல்லியிருந்தால், நாங்கள் நிகழ்ச்சியை நிறுத்தியிருப்போம்” என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.