பாஜகவில் இருந்து அழைப்பு… கட்சி மாறும் நக்மா?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது காலியாக உள்ள 57 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநிலங்களவை தேர்தலில்
காங்கிரஸ்
கட்சி சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மேலிடம் அண்மையில் வெளியிட்டது.

ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், ஹரியாணா, கா்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாததால் நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நக்மா அதிருப்தி தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் கடந்த 2003-04 ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என தலைவர் சோனியாக காந்தி உறுதி அளித்திருந்தார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனால் 18 வருடங்கள் ஆகியும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்ரானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு தகுதி இல்லையா.” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 1 மாநிலங்களவை உறுப்பினர் தேர்வாகப்படக் கூடிய நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தனக்கு வாய்ப்பளிக்காமல், ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரானுக்கு வாய்ப்பளித்ததால் நக்மா தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகை நக்மா காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து நக்மாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், “ காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது 9 மொழி படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அந்த பதவியை அப்போது அவர் ஏற்கவில்லை. சினிமாவில் நடிப்பது பாதிக்கப்படும் என்பதால் அதனை அவர் தவிர்த்து விட்டார்.

ஆனாலும், மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக 7 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய நக்மா, எப்படியும் தமது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். இந்த முறை மாநிலங்களவைக்கு செல்லும் முயற்சிகளையும் அவர் செய்து வந்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர், கட்சிக்காக கடுமையாக உழைத்த தனக்கு இதற்கு மேல் என்ன தகுதி வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டார். இது பற்றி கட்சி மேலிடத்திற்கும் தனது விளக்கத்தை நக்மா அளித்துள்ளார்.” என்றனர்.

நக்மா கட்சி மாறுவது பற்றிய பேசிய அவர்கள், “நக்மாவின் உழைப்பை பார்த்தும், அவருக்கு பொது மக்களிடம் இருக்கும் செல்வாக்கை பார்த்தும் பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிகமாக பாஜகவில் இருந்தே அழைப்புகள் வருகின்றன. அவருக்கு மற்ற கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை.” என்றனர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி தெரிவித்த நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். முதலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளையும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையும் குஷ்பு வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார். அதன்பின்னரே அவர் பாஜகவில் இணைந்தார். அதேபோல், நக்மாவும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவதால், குஷ்பு பாணியில் நக்மாவும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.