படுக்கையறையில் மனைவியைப் பார்த்து பயப்படும் கணவர்… இது என்ன பிரச்னை? காமத்துக்கு மரியாதை S2 E23

இன்றைய பெண்கள் செக்ஸுவல் லைஃப் பற்றி ஓரளவுக்கு வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களுடைய தாம்பத்திய உறவில் வருகிற பிரச்னைகளை அவ்வளவு எளிதில் வெளியே சொல்லிவிடுவதில்லை… மிகவும் நம்பிக்கையானவர்களைத் தவிர்த்து. அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் நம்முடைய வாசகி ஒருவர், அவருடைய பிரச்னையை [email protected] வழியே நம்மிடம் பகிர்ந்திருந்தார்.

“எனக்கு சில மாசங்களுக்கு முன்னாடிதான் கல்யாணமாச்சு. என் கணவர் ராத்திரியானாலே என்கிட்ட வர மாட்டேங்குறார். கிட்டத்தட்ட என்னைப் பார்த்தாலே நடுங்குறார்னுகூட சொல்லலாம். தாம்பத்திய உறவை எப்படியாவது தவிர்க்கப் பார்க்கிறார்னு புரியுது. ஆனா, அது ஏன்னுதான் புரியலை…” – இதுதான் அந்த வாசகியின் பகிர்வு. அவருடைய கணவருக்கு என்ன பிரச்னை என்பதை பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.

காமத்துக்கு மரியாதை

“இரவுகளில் கணவர் மனைவியைப் பார்த்து இப்படி நடுங்குகிறார் என்றால், அவருக்கு நிச்சயம் பிரச்னை இருக்கிறது என்றே அர்த்தம். குறிப்பாக, ஆண்மைக்குறைபாடு இருக்கிற ஆண்கள் இரவானால் இப்படித்தான் பயப்படுவார்கள். இவர்களைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால், மனைவியை விட்டு விலகி வெளியே நண்பர்களுடன் இருக்கிற நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதுவே வீட்டுக்குள் இருக்கும் நேரங்களில் மனைவி அருகே வந்தாலே பதற்றமாகிவிடுவார்கள். தவிர, வீட்டுக்குள் இருக்கும் நேரங்களில் கையில் செல்போன், லேப்டாப் என்று வைத்துக்கொண்டு வேலை செய்துகொண்டே இருப்பார்கள் அல்லது வேலை செய்வதுபோல காட்டிக் கொள்வார்கள். அப்படியிருக்கையில்தான் தாம்பத்திய உறவுபற்றிய பயமில்லாமல் இவர்களால் இருக்க முடியும்.

மனைவி படுக்கையறைக்குள் வருவதற்கு முன் தூங்கிவிடுவது அல்லது தூங்குவதுபோல நடிப்பது, மனைவி தூங்கும் வரைக்கும் டிவி பார்த்துக்கொண்டிருப்பது, மனைவி செய்கிற வேலைகளில், சமையலில் என்று தினமும் ஏதாவது குற்றம் கண்டுபிடித்து சண்டை போட்டு, அதையே சாக்காக வைத்து தாம்பத்திய உறவைத் தவிர்த்துவிடுவார்கள். இந்த யுக்தியைத் தொடர்ந்து செய்ய முடியாது என்பது இப்படிப்பட்ட கணவர்களுக்குத் தெரியும் என்றாலும், முடிந்தவரை நம்முடைய பிரச்னையை வெளியே தெரியாமல் சமாளிக்கலாம் என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

பாலியல் நிபுணர் காமராஜ்

உண்மையில் இந்தப் பிரச்னையால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற ஆண்களின் மனநிலையை விவரிப்பது கடினம். எழுத்தாளார் லியோ டால்ஸ்டாய் சொல்லியிருப்பதைப்போல, ஆண்களால் சுனாமி, நிலநடுக்கங்களைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், படுக்கையறையில் மனைவியுடன் உறவுகொள்ள முடியவில்லை என்பதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. தன்னால் தாம்பத்திய உறவுகொள்ள முடியவில்லை; தனக்கு ஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது நிலைகுலைந்துவிடுவார்கள். இந்த வாசகியின் கணவர் இரவுகளில் இயல்பாக இருக்க முடியாததுக்கும் இதுதான் காரணம்.

இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடையாது என்றே பாதிக்கப்பட்ட தம்பதியர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இதுபற்றி அவர்களுக்குள்ளாகவேகூட விவாதிப்பதில்லை. தாம்பத்திய உறவில் வருகிற பிரச்னைகளையும் வெளிப்படையாகப் பேச வேண்டும். ஒரு பாலியல் மருத்துவரை அணுகினால் வாசகி கணவரின் பிரச்னையை சரி செய்துவிடலாம். செக்ஸ் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் இன்றைக்கு மருந்துகள் இருக்கின்றன; மருத்துவமுறைகளும் இருக்கின்றன. அனைவரும் பயன்படுத்திக்கொள்கிற அளவில்தான் அவற்றின் விலையும் இருக்கிறது.

காமத்துக்கு மரியாதை

செக்ஸ் அசிங்கமில்லை. அது நம் உடல் மற்றும் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதில் ஒரு பிரச்னையென்றால், விஞ்ஞான பூர்வமாகத்தான் அணுக வேண்டும். இதனாலெல்லாம் மனிதர்களின் தன்மானம் போகாது” என்று முடித்தார் டாக்டர் காமராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.