Ooty: டைனோசர் காலத்து ஜிங்கோ பைலபா டு த்ரில்லிங் கேர்ன் ஹில் வரை மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நீலகிரி கோடை விழா இனிதே நிறைவடைந்திருக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரியின் இயற்கை எழிலைக் கண்டு ரசித்துச் சென்றிருக்கிறார்கள். ஊட்டியை நோக்கி படையெடுக்கும் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்திருக்கிறது. சுற்றுலாத் தலங்கள் கூட்ட நெரிசலின்றி காணப்படுகின்றன. நீலகிரியின் இயற்கை அழகை நிதானமாகக் கண்டு ரசிக்கவும் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும் உகந்த தருணம் இது.

உதகமண்டலம்

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வழக்கமாகச் செல்லும் பொட்டானிக்கல் கார்டன், தொட்டபெட்டா, போட் ஹவுஸ், பைக்காரா போன்ற சுற்றுலாத் தலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடங்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம். நீலகிரிக்குச் செல்பவர்கள் அதன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தப் பொருள்களையும் எடுத்துச்செல்லாமல் இருப்பது நம் முதல் கடமை.

இதமான இளைப்பாறுதலுக்கு காட்டேரி பூங்கா!

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து, பசுமை நிறைந்த மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் வளைந்து நெளிந்து பயணித்துவரும் வரும் நம்மை வரவேற்கும் நீலகிரியின் முதல் சுற்றுலாத் தலமாக இதமாக வரவேற்கிறது காட்டேரி பூங்கா. நான்கு பக்கமும் மலைகள் சூழ, பசுமைக் கிண்ணம் போல அமைந்திருக்கும் அந்தப் புல்வெளியை பூக்காடாக மாற்றி பராமரித்து வருகிறது நீலகிரி தோட்டக்கலைத்துறை. 5 ஏக்கர் பரப்பளவில் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காட்டேரி பூங்கா, அமைதிப்பூங்கா என்றே அழைக்கப்படுகிறது.

ஊட்டி குளிரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இளஞ்சூடான தட்பவெட்பம் நிலவும் இந்த பள்ளத்தில் ஸ்பத்தோடியா, ஜெகரண்டா போன்ற பூ மரங்கள் ஒவ்வொரு சீனிலும் பூக்களை மழையென பயணிகள் மீதும் புல்வெளிகள் மீதும் பொழிந்து கொண்டே இருக்கும். இது போதாது என்று பல ரகங்களில் சுமார் ஒரு லட்சம் மலர் செடிகளை நடவுசெய்து பராமரித்து வருகின்றனர். பூங்காவின் சற்று அருகில் பெரும்பாறைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து ஓடும் குன்னூர் ஆற்றின் ஓசை ரீங்காரமாய் நம்மை மயக்கும். பரந்து விரிந்திருக்கும் பச்சை புல்வெளிகளில் அமர்ந்து தூரத்து மலைகளைக் கண்டு ரசிக்க ஏற்ற இடமாகவும் இருக்கிறது.

காட்டேரி பூங்கா

நெடுஞ்சாலையை ஒட்டியே இந்த பூங்காவின் நுழைவு வாயில் இருந்தாலும், பெருமபாலான சுற்றுலாப் பயணிகள் கண்ணில் இந்தப் பூங்கா படுவதில்லை. தோட்டக்கலைத்துறையால் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்காவில் கழிவறை, பார்க்கிங் போன்ற அனைத்து வசதிகளும் நல்ல முறையில் இருக்கிறது. நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ. 5 மட்டுமே வசூலிக்கிறார்கள். குழந்தைகள் குதூகலிக்க தனி இடத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள். சீசன் உச்சத்தில் இருக்கும் சமயங்களில் கூட இந்த பூங்காவில் பயணிகள் கூட்டம் இருக்காது. இதனால், மன அமைதி வேண்டி வருவோர் நீண்ட நேரம் இளைப்பாற ஏற்ற இடம் இந்த காட்டேரி பூங்கா.

த்ரில்லிங் எக்ஸ்பீரின்ஸுக்கு கேர்ன் ஹில் ஃபாரஸ்ட்!

ஊட்டி மெயின் பஸ் ஸ்டாண்டில் இருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3- வது கி.மீ இருக்கிறது கேர்ன் ஹில் வனப்பகுதி. இடது பக்கம் வைக்கப்பட்டுள்ள சிறிய வரேவேற்பு வளைவு வழியாக உள்ளே‌ சென்றால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிசப்தமாக நம்மை காட்டுக்குள் அழைத்துச்செல்லும். அமைதியாகக் காட்டை ரசித்தபடி சில மீட்டர்கள் தொடர்ந்து பயணித்தால் கேர்ன் ஹில் வனப்பகுதியின் விளக்க மையக் கட்டடத்தைப் பார்க்கமுடியும். சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறை மற்றும் தோடர் பழங்குடிகள் இணைந்து நடத்தும் இந்த அழகிய வனத்தைச் சுற்றிப்பார்க்க நுழைவுக் கட்டணமாக, பெரியவர்களுக்கு 30, சிறுவர்களுக்கு 10 வசூலிக்கிறார்கள். வாகனங்களுக்கு ஏற்ப பார்க்கிங் கட்டணம் தனியாக வாங்குகிறார்கள். தோடர்களின் பாரம்பரிய குடியிருப்பைப் போன்ற வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த வன விளக்க மையத்திற்குள் நீலகிரியில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள், நவீன நீலகிரி உருவான வரலாறு போன்ற தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது நீலகிரிக்கே உரித்தான பறவைகள் மற்றும் விலங்குகளின் புகைப்படங்களுடன் ஒலிகள் அடங்கிய தொகுப்பும் இடப்பெற்றிருக்கிறது.

கேர்ன் ஹில் ஃபாரஸ்ட்

இறந்த சிறுத்தை, மான், மலபார் அணில், நீலகிரி வரையாடு போன்றவற்றின் உடல்களையும் பதப்படுத்தி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இவற்றின் வாழிடங்களை விளக்கும் வைகையில் சிந்தட்டிக் பாறைகளைக் கொண்டு திகிலூட்டும் சிறிய குகை ஒன்றை தத்ரூபமாக உருவாக்கியிருக்கிறார்கள். இதனுள் நுழையும்போதே வேற லெவெல் த்ரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கிறது. வானுயர்ந்த மரங்களுக்கு நடுவே நடைபயணமாகச் சென்று வனத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள காட்சி கோபுரத்தில் இருந்து இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இதைவிட கூடுதல் சிறப்பம்சமாக மரங்களுக்கு நடுவே உயரமான தொங்கும் பாலம் ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள். ஹேங்கிங் ப்ரிஜ் எனப்படும் ஊசலாடும் அந்த தொங்கு பாலத்தில் நடந்தபடி காட்டை ரசிப்பது நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் ஒரே இடத்தில் பல்வேறு வகையான ஆர்க்கிட் மலர்களைக் கண்டு ரசிக்கும் வகையில், இங்குள்ள பசுமைக்குடிலில் 34 வகையான ஆர்கிட் தாவரங்களை பராமரித்து வருகிறார்கள். தோடர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பழங்குடியின மக்களின் 2 விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றில் தோடர் எம்ராய்டரி, தேன், ஊட்டி சாக்லேட் போன்ற பொருள்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

டைனோசர் காலத்து ‘ஜிங்கோ பைலபா’ முதல் உள்ளூர் மரங்கள் வரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் மரவியல் பூங்கா!

ஊட்டி மத்திய பேருந்து நிலயத்தில் இருந்து முத்தோரை பாலாடா செல்லும் வழியில் 10 நிமிட நடைபயணத்தில் சென்றடையலாம். இந்த மரவியல் பூங்காவை, சுமார் 1.50 ஹெக்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் மிகச் சிறிய இந்தப் பூங்காவுக்குள் ஏகப்பட்ட அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் 1982-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் இந்த மரவியல் பூங்கா உருவாக்கப்பட்டது. குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய சுமார் 60 வகையான மரங்களை இந்தப் பூங்காவில் பராமரித்து வருகின்றனர். அவற்றில் மிக மிக அரியவகை மரங்களான டைனோசர் காலத்து ‘ஜிங்கோ பைலபா’ மரம், கிரிக்கெட் பேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் வில்லோ மரங்கள், கனடா நாட்டின் மேப்பில் மரங்கள் என பல்வேறு வகையான மரங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன.

மரவியல் பூங்கா

அதே வேளையில், உள்ளூர் மரங்களான விக்கி போன்ற சோலை மரங்களும் இந்தப் பூங்காவில் கண்டு ரசிக்க முடியும். மரங்களோடு மலர்களையும் கண்டு ரசிக்கும் வகையில், பல்வேறு ரகங்களில் வளர்க்கப்படும் வண்ண வண்ண பூக்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பூங்கா செயல்படும். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10 ,சிறுவர்களுக்கு ரூ.5 மட்டுமே வசூலிக்கிறார்கள். சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படமால் இருக்கும் இந்த மரவியல் பூங்கா தவிர்க்கவே கூடாத ஒன்று.

தோடர் பழங்குடிகளின் வாழ்யவிலை எடுத்துரைக்கும் முத்தநாடு மந்து!

நீலகிரியில் வாழ்ந்து வரும் 6 வகையான பண்டையப் பழங்குடியின மக்களில் ஒருவர்களான தோடர் பழங்குடிகள் அப்பர் நீல்கிரிஸ் என்று சொல்லக்கூடிய நீலகிரி மலை உச்சிகளில் வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கே உரித்தான தனித்துவமிக்க இசை, நடனம், உடை, உணவு போன்றவற்றை பாரம்பர்யம் மாறாமல் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்‌. இது மட்டுமல்லாது ஆயர் சமூகமாக அறியப்படும் தோடரின மக்கள் உலகின் தனித்துவம் வாய்ந்த தோடர் வளர்ப்பு எருமைகளைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர். பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு சடங்கிலும் இவர்களின் எருமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆடைகளில் பூ வேலைப்பாடுகள் செய்வதில் கை தேர்ந்த தோடரின பெண்கள் தயாரிக்கும் ‘பூத்துக்குளி’ எனும் தோடர் எம்பிராய்டரி சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. நீலகிரியில் புவிசார் குறியீடு பெற்ற ஒரே உற்பத்திப் பொருளாக இந்த எம்பிராய்டரி மட்டுமே இன்றைக்கும் இருந்து வருகிறது. நீலகிரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் தோடர் பழங்குடிகள் குறித்து அறிந்துகொள்ள அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி விரும்புவோருக்கு ஏற்ற இடமாக இருக்கிறது முத்தநாடு மந்து தோடர் பழங்குடி கிராமம்.

முத்தநாடு மந்து

ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் 10வது கி.மீ இருக்கிறது இந்த மந்து. (தோடர்கள் வாழும் பகுதிய மந்து என்றே அழைக்கப்படுகிறது). ஒட்டுமொத்த தோடர்களின் தாய் மந்தாக இந்த மந்து கருதப்படுகிறது. அந்த மக்களின் மிகப் பழைமையான வழிபாட்டுத் தலத்தைக் காண முடியும். இந்த மந்தைத் தவிர வேறு எந்த மந்திலும் இதுபோன்ற வழிபாட்டுத் தலத்தைப் பார்க்க முடியாது. பழகுவதற்கு இனிமையான இந்த மக்களோடு பேசி அவர்களின் வாழ்வியல் முறைகளைத் தெரிந்து கொள்வதோடு அவர்கள் கைப்பட தயாரிக்கும் பூத்துக்குளியையும் உரிய விலைக்கொடுத்து வங்கமுடியும். இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்திருந்திருக்கும் அந்தக் கிராமத்தையும் அந்த மக்களுடன் சேர்ந்து சுற்றிப் பார்க்கலாம்.

மனதைக் கொள்ளைக் கொள்ளும் ரன்னிமேடு மலை ரயில் நிலையம்!

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்ய அந்தஸ்தைப் பெற்றிருக்கும் நீலகிரி மலை ரயில் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணிப்பதற்காகவே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகைத் தருகின்றனர். இந்த மலை ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைப்பது தற்போது குதிரைக் கொம்பாக இருக்கிறது. மலை ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் மலை ரயில் நிலையங்களைச் சுற்றிப் பார்க்கத் தவறுவதில்லை. இந்தப் பட்டியலில் ரன்னிமேடு ரயில் நிலையம் இருக்கிறது. குன்னூரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் காட்டேரி பூங்காவை ஒட்டியே அமைந்திருக்கிறது. நிலக்கரி மூலம் மலை ரயில் இயக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்த ரயில் நிலையத்தில் தான் ரயிலை இளைப்பாறச் செய்வது வழக்கம். நீராவிக்குத் தேவையான தண்ணீர் நிரப்புவது போன்ற பராமரிப்பும் இந்த இடத்தில் நடக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் பயணிகளும் இளைப்பாற ஏற்ற இடமாக இருக்கிறது.

மலை ரயில்

எண்ணற்ற அரிய வகை பறவைகள், சோலை மரக்காடுகள், தேயிலைத் தோட்டம், மலைக் குன்றுகள் என நீலகிரியின் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்க முடியும். இது மட்டுமல்லாது இந்த ரயில் நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் பாறைகளுக்கு நடுவே ஆற்றுநீர் சலசலத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம். இது எல்லாவற்றையும்விட ஆசியிவின் மிக நீளமான பல் சக்கரத் தண்டவாள அமைப்பும் இந்த நிலைத்தைக் கடக்கிறது. மேலும், ஸ்விட்சர்லாந்துக்கு அடுத்தபடியாக சரிவான தண்டவாளத்தையும் இந்த இடத்தில் மட்டுமே பார்க்க முடியும். அருகில் ஓடக்கூடிய ஆற்றில் மகாத்மா காந்தியின் அஸ்தியை கரைதிருக்கிறார்கள். பயணிகள் இளைப்பாற ஏற்ற வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது தென்னக ரயில்வே நிர்வாகம்‌.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.