வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உத்தரகாசி : உத்தரகண்டில் பக்தர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர். உத்தரகண்டில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் யாத்திரை, ‘சார் தாம்’ யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் யமுனோத்ரிக்கு நேற்று, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு பஸ்சில் சென்றனர். இந்த பஸ் மலைப்பாதையில் சென்றபோது, உத்தரகாசி மாவட்டத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 22 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீோட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, அதிர்ச்சி தெரிவித்ததுடன், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா, 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தோருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி அறிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரகண்ட் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு, மீட்பு பணிகளை முடுக்கி விடும்படி உத்தரவிட்டார்.
Advertisement