கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்தை ஆவின் நிறுவனம் இன்னும் தயாரிக்கவில்லை – மா. சுப்பிரமணியன்

WHO கொடுத்திருக்கும் வழிகாட்டுதல் படி தான் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்தை ஆவின் நிறுவனம் இன்னும் தயாரிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மருத்துவ மாணவர்களின் திறன் மேம்பாடு, புத்தாக்க பயிற்சி நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளரிடம் பேசியது, ‘’மருத்துவ சேவைகளை டிஜிட்டல் போர்டு மூலம் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தி இருக்கிறோம்.
பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு உண்மையில்லை. இதற்கு அரசு சார்பில் ஏற்கெனவே விளக்கம் அளித்து இருக்கிறோம். கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை அரசே வாங்கித்தருவது 2018இல் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. மருத்துவச்சேவை கழகம் மூலம் பொருட்கள் வாங்குவது, டெண்டர் விடப்படுவது, கண்காணிப்பு என அனைத்தும் செய்யப்படுகிறது. ஏற்கெனவே ஒதுக்கீடு செய்த 450 கோடி கொரோனா காலத்தில் முறையாக மக்களுக்கு கிடைக்காததால் அந்த தொகை அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறோம் என்றார்.
image
ஆவின் ஹெல்த் மிக்ஸ் கர்ப்பிணிகளுக்கு உதவுமா என்பது கேள்வியாக இருக்கிறது. இன்னும் அதை ஆவின் நிறுவனம் தயாரிக்கவில்லை. குழந்தைகளுக்கு மட்டுமே கொடுக்க முடியும். இதில் விலை குறைவு என்பதால் ஆவினில் இருந்து வாங்கமுடியாது என அமைச்சர் விளக்கம் அளித்தார். அதேபோல் பொதுவாக மார்க்கெட்டில் 588 ரூபாய் இருக்கிறது. இதில் அரசு டெண்டர் கொள்முதல் மூலமாக 460.50 காசுக்கு கொள்முதல் செய்வதாக தெரிவித்தார். அதேபோல் என்ன ஊட்டச்சத்து சாப்பிட வேண்டும் என்று WHO அங்கீகரித்து இருக்கிறதோ அதைத்தான் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார். டெண்டர் இன்னும் கொடுக்காத சூழலில் இந்த நிறுவனத்துக்குத்தான் செல்லும் என யூகமாக பேசுவது சரியானது அல்ல எனவும் தெரிவித்தார்.
image
அதேபோல் இந்த விவகாரத்தில் செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு மருந்து சேவைகள் கழகம் சார்பில் அதிகாரிகள் இணைந்து கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். உலக சுகாதார நிறுவனம் கர்ப்பிணிகளுக்கு அளித்திருக்கும் வழிக்காட்டுதல் அடிப்படையில்தான் ஊட்டச்சத்து தரத்தின் அளவில் கொடுக்க முடியும். 2018 முதல் இந்த ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போதும் அதுபோன்ற நடைமுறைதான் அரசு மேற்கொண்டு இருக்கிறது.
ஊட்டச்சத்து வழங்குவது குறித்து அரசு 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை ஏற்கெனவே உருவாக்கி இருக்கிறது. இதில் ஆவின் பொது மேலாளர் உறுப்பினராக இருக்கிறார். பிப்ரவரி முதல் 2 ஆலோசனை கூட்டம் நடந்து இருக்கிறது. ஆவின் நிறுவனம் சார்பில் ஊட்டச்சத்து தயாரிக்க முடியுமா என்று இன்னும் அறிக்கை கொடுக்கவில்லை. எனவே டெண்டர் தொடர்பாக முறையாக முதல் கட்டம் தொடங்க இருக்கிறோம். இதில் அரசு வழிகாட்டுதல் நடவடிக்கை முறையாக பின்பற்றப்படும் என தெரிவித்தார்.
image
தொடர்ந்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பேட்டியளித்தார். அப்போது, 2018இல் 11 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்களால் தேர்வு செய்தவர்களிடமிருந்துதான் ஊட்டச்சத்து பொருட்களை வாங்குகிறோம். 32 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே இதுகுறித்து ஆலோசிக்க 2 முறை கூட்டம் நடந்தது. ஆவின் பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கூட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அரசு முடிவின்படி தான் டெண்டர் கொடுக்க முடியும். ஊட்டச்சத்து பொருட்கள் ஆவினில் இருந்து பயன்படுத்த முடியுமா என்று கேட்டதில், ஆவின் இன்னும் அறிக்கை கொடுக்கவில்லை. முதற்கட்டமான டெண்டர் கொடுப்பது தொடர்பாக தயாராகி இருக்கிறோம் என்று தெரிவித்தார். 
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், WHO வழிகாட்டுதல் படி தான் ஊட்டச்சத்து, இரும்புச்சத்து போன்றவை பின்பற்றப்பட வேண்டும். தற்போது ஆவின் தயாரிப்பில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிக்கப்படவில்லை. தவறான தகவல்களை கொண்டு சென்றால் கர்ப்பிணிகளுக்கு அச்சம் ஏற்படும் என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.