பிரன்டன் மெக்கல்லத்துடன் இணைந்து பணியாற்றியது உற்சாகம் தந்தது – பென் ஸ்டோக்ஸ்

லண்டன்,

இங்கிலாந்து – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.இந்த டெஸ்ட்டில் இங்லாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில்,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி என்றாலே அதுவும் லார்ட்சில் மோதுவது எப்போதுமே வியப்புக்குரிய வகையில் இருக்கும். எனது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லத்துடன் இணைந்து முதல்வாரம் பணியாற்றியது உண்மையிலேயே உற்சாகம் தந்தது.

இந்த டெஸ்டை பொறுத்தவரை இரு அணியினருக்குமே ஏற்றம் இறக்கம் கொண்டதாக இருந்தது. எந்த ஒரு தருணத்திலும் யாருடைய கையும் ஓங்கவில்லை. கடினமான இந்த ஆடுகளத்தில் 277 ரன்களை விரட்டிப்பிடித்தது அற்புதமானது. 10 ஆயிரம் ரன்களை, 4-வது இன்னிங்ஸ் சதத்தோடு நிறைவு செய்வது அருமையான சாதனை. என்ன ஒரு அற்புதமான வீரர் ஜோ ரூட் என்று கூறினார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘பந்து ரொம்ப கடினத்தன்மையுடன் இருக்கும் போது பேட்டிங் செய்வது எவ்வளவு சிரமம் என்பதை பார்த்தோம். இரு அணியினருமே போராடினோம். காலையில் கருமேகம் திரண்டு இருந்ததால், ஆடுகளம் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று நம்பினோம். ஆனால் அது மாதிரி எதுவும் நடக்கவில்லை. இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் சரி செய்ய முயற்சிப்போம்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.