உத்தரப்பிரதேசம்: ராம்பூர், அசம்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அம்மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அசம் கான் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் வருகிற ஜூன் 23-ம் தேதி ராம்பூர் மற்றும் அசம்கர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்து இருந்தனர். இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அதில் பகுஜன் சமாஜ் கட்சி ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இரண்டாம் நிலைத் தேர்தலில் போட்டியிடாது, மேலும் இந்தத் தொகுதியில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காது என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் கட்சி தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அதாவது, ராம்பூர், அசம்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்யவில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.மேலும் 2024-ல் நடக்கும் மக்களவை பொதுத்தேர்தலே தங்களது இலக்கு எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
