பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் ‘குஜராத் கவுரவ் அபியான்’ திட்டத்தின் மூலம் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து இன்று குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள வதோதராவைச் சேர்ந்த தன் முன்னாள் பள்ளி ஆசிரியர் ஜக்தீஷ் பாய் நாயக்கரைச் சந்தித்தார். அவர் குஜராத்தின் வாட்நகரில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்தார். அப்போதுதான் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாடம் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. அவர் தற்போது குஜராத்தில் உள்ள வியாரா நகரில் வசித்து வருகிறார்.

பிரதமரும் அவரின் முன்னாள் ஆசிரியரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பிரதமர் தன்னுடைய முன்னாள் ஆசிரியரைக் கூப்பிய கைகளுடன் வரவேற்பதையும், ஆசிரியர் அவரை கட்டிப்பிடிக்க முயற்சிப்பதையும் காணலாம். பிரதமரின் இந்த சந்திப்புக்குப் பிறகு ஜக்தீஷ் பாய் நாயக் பிரதமர் மோடியைப் பாராட்டி, “உலகம் முழுவதும் ஒளியைப் பரப்ப எப்போதும் தயாராக இருந்த மாணவர்களில் நரேந்திராவும் ஒருவர். அவர் எப்போதும் அதற்குத் தயாராக இருந்தார்” எனக் கூறினார்.