வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலக்காடு-”கேரள முதல்வர் சார்பில் என்னிடம் சமரச பேச்சு நடத்திய ஷாஜ் கிரண், ‘தங்க கடத்தல் வழக்கில் முதல்வரின் மகளை சம்பந்தப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என எச்சரித்தார்,” என தங்க கடத்தல் புகழ் ஸ்வப்னா சுரேஷ் நேற்று தெரிவித்தார்.
![]() |
ரூ.15 கோடி
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகம் வாயிலாக கடத்தி வரப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், 2020ல் பிடிபட்டது.இந்த வழக்கில், துாதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின் ‘ஜாமினில்’ விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், நீதிமன்றத்தின் முன் ஆஜரான ஸ்வப்னா சமீபத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, இந்த கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி, மகள், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என, அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்வப்னா, முதல்வர் தரப்பில் இருந்து தன்னிடம் சமரசம் பேச வந்த ஷாஜ் கிரண் என்பவருக்கும், தனக்கும் நடந்த 5 மணி நேர உரையாடலில் இருந்து ஒன்றரை மணி நேர உரையாடலை வெளியிட்டு கூறியதாவது:முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரன் வாயிலாக ஷாஜ் கிரணை எனக்கு தெரியும். அவர் என் நீண்ட கால நண்பர். நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்த பின் என்னை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். அவருடன் இப்ராஹிம் என்பவரும் வந்தார்.
![]() |
‘வீடியோ’
‘நீ யாருடன் விளையாடுகிறாய் என்பது தெரியுமா. இந்த விவகாரத்தில், நீ முதல்வர் மகளின் பெயரை இழுப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. ‘உன்னுடைய வாக்குமூலத்தை திரும்ப பெற்றுவிடு. இல்லையெனில் விளைவுகள் விபரீதமாக இருக்கும். உன்னுடைய, ‘வீடியோ’க்கள் வெளியாகும்’ என ஷாஜ் எச்சரித்தார். இவ்வாறு ஸ்வப்னா தெரிவித்தார்.
Advertisement