கலை உலகில் கால்நூற்றாண்டு… பத்மினி

Padmini’s 25 Years in the Dream Factory

நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்பது கலையுலகுக்கு பொருத்தமான பழமொழி. அதில் நிரந்தர உற்சாகத்துடனும், நீடித்த புகழுடனும் இருக்கும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள், திருமதி பத்மினிக்கு ஒரு விசேஷ இடம் உண்டு. அவர் காலில் சலங்கை கட்டி கலை உலகுக்குள் புகுந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அவர் புகழ் ஒளி நட்சத்திரமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அன்று போல் இன்றும் அவர் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகிதான். அன்று மேடையில் ஒலியுடன் நடனமாடத் தொடங்கிய பாதங்கள் இன்றும் ஒய்வெடுத்துக் கொள்ளவில்லை.  

Padmini’s 25 Years in the Dream Factory

25 ஆண்டுகளில் 250 படங்களுக்குமேல் நடித்துவிட்ட அவர், தன் நெருக்கடியான திரையுலக வேலைகளுக்கிடையே நாட்டியப் பணியில் உற்சாகமாக ஈடுபட்டு ராமாயணம், தசாவதாரம் போன்ற அமர காவியங்களை நாட்டிய நாடகமாக்கி கலையுலகுக்கு அளித்திருக்கிறார்.

சமீபத்தில் அவர் சிறப்பாகத் தயாரித்து அரங்கேற்றியிருப்பது மகாகவி காளிதாசரின்  ‘சாகுந்தலம்.’  அவருடைய பாதையில் கலைப்பணியாற்றி ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வி’ போன்ற நாட்டிய நாடகங்களைத் தயாரித்துப் புகழ் பெற்ற நடிகை சந்திரகாந்தா பேட்டி காண்கிறார்.

சந்திரகாந்தா :-  இங்கே உங்களைப் பேட்டி காண ஒரு நடிகையாக நான் வரவில்லை….. உங்கள் ரசிகையாக வந்திருக்கிறேன். 

பத்மினி :- ஒரு நட்சத்திர ரசிகையைப் பெற்ற நான், பாக்கியசாலி தான்! 

சந்திரகாந்தா :- ஊஹும்… நீங்கள்தான்… கலை உலகுக்கு ஒரு பாக்கியம்….! நீங்க கலையுலகுக்கு வந்து 25 வருஷமாயிற்று என்று நம்பவே முடியலை! என்றும் அதே அழகுடன்… அதே உற்சாகத்துடன… 

பத்மினி :- என்னவோ, இப்படியே கலைப்பணி செய்யணும்னுதான் ஆசை. 

சந்திரகாந்தா :- நீங்க இப்படி 25 வருஷமா ‘ஸ்டெடியா’ கலையுலகிலே இருக்கறத்துக்கு, உங்களிடமுள்ள அபூர்வத்திறமை, அழகு, பண்பு, அடக்கம், ஆர்வம் இவை தான் காரணம்னு நான் நினைக்கிறேன். 

பத்மினி :- நான் அப்படி நினைக்கல்லே. நான் கஷ்டப்பட்டு உழைக்கறதைப் புரிஞ்சு, ரசிகர்கள் ஆதரவு காட்டறதாலேதான் நான் ‘ஃபீல்ட்லே’ நிற்கறேன். உண்மையான உழைப்பில் மட்டும்தான் எனக்கு நம்பிக்கை இருக்கு. 

சந்திரகாந்தா :– இதைத்தான் நான் சொன்னேன், அடக்கம்னு! உங்க கால்நூற்றாண்டு ‘அச்சீவ்மெண்ட்’ (வெற்றிச் சாதனைகள்) பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்….. 

பத்மினி :- ஒரே வார்த்தை. நான் இதுவரை ஒண்ணும் ‘அச்சீவ்’ பண்ணலை. ஏதாவது செய்யணும்கிற துடிப்பிலே உழைச்சுக்கிட்டிருக்கேன். 

சந்திரகாந்தா :- இதற்கு என் ஒரே பதில்… “உங்க வார்த்தையை நான் ஒத்துக்கொள்ளவில்லை! அப்பப்பா, கல்பனா படத்திலே பத்து வயசிலே நுழைஞ்சவங்க, இதுவரை ஆயிரம் படத்திலே  நடிச்சு புகழ்க்கொடி நாட்டியிருக்கீங்களே…! அது ஒரு சாதனையில்லையா? 

பத்மினி :- என்ன இப்படி ஒரேயடியா ஆயிரம்னு என் முன்னாலேயே சொல்றே? ஆயிரம் படம் ஒண்ணும் இல்லை……. 250, 300 படம் இருக்கும். அவ்வளவு தான்.  

சந்திரகாந்தா  :- அப்படி வாங்க வழிக்கு! உங்களிடம் உண்மையை வரவழைக்கத்தான் அப்படி ஆயிரம்னு சொன்னேன். ஆனா நீங்க ஆயிரம் படங்களில் நிச்சயம் நடிப்பீங்க.  

பத்மினி :- உன் ஆசைக்கு ரொம்ப  நன்றி. 

சந்திரகாந்தா :– உங்களோட குறையில்லாத கலை ஆர்வத்துக்கு ஏதாவது பின் பலம் உண்டா?

பத்மினி:- ஒரே பலம். கடவுளின் அருள்தான்! கலையார்வம் ஒரு ‘கிஃப்ட்’. அது இன்னொருவர் ‘இன்ஜெக்ட்’ செய்துவர்றது இல்லை. ஓர் ‘இன்ஸ்பரேஷன்’லே வருவது. 

சந்திரகாந்தா :- நடிப்புத் துறையிலேயும், நாட்டியத் துறையிலேயும் ஒரே சமயத்தில் எப்படி கவனம் செலுத்த முடிகிறது? அதுவும் ஒரு நாட்டியக் குழுவையும் வைத்துக் கொண்டு சமாளிக்கிறீர்கள். சிரமமாக இல்லையா? 

பத்மினி  :- எனக்கு இது கஷ்டமாத் தெரியலே. ஏதாவது ஒன்று குறைஞ்சாத்தான் கஷ்டமா இருக்கும்.  

Padmini’s 25 Years in the Dream Factory

சந்திரகாந்தா  :- சிறந்த நடிகையாவதற்கு, நடனத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமா?  

பத்மினி :- சிறந்த நடிகையர் எல்லாரும் சிறந்த நடன மணிகளாகவும் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால், நடிப்பில் சுலபமாக தேர்ச்சி பெற, நடனம் உதவுகிறது. ஒரு சின்ன பாவம், சோக ரசமா வேணும்னு சொன்னா, ஒரு டான்ஸர் அதை சுலபமாகப் புரிஞ்சுக்க முடியும். அதுவும், மேடைப் பழக்கம் இருந்தா, அது, சினிமாவுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. முதலில் பயம் போயிடும். பாவங்கள் எல்லாம் நல்லா வரும். நாட்டியம் தெரிந்திருந்தால் நடிக்கும்போது, நடப்பது… உட்காருவது… ஓடுவது எல்லாம் கொஞ்சம் அழகா ‘கிரேஸ் ஃபுல்லா’ செய்யலாம்.  

சந்திரகாந்தா :- அதே நேரத்திலே நாட்டியம் ஆடுவதால் உடம்பும் அழகா இருக்கும்! இல்லீங்களா? 

பத்மினி :- இருக்கணும்; ஆனால் எனக்கு இருக்கோ என்னவோ தெரியலை! 

சந்திரகாந்தா :- ஏன் அப்படிச் சொல்றீங்க! அன்னிக்கு சம்பூரண ராமாயணத்திலே நடிக்கும்போது நான் பார்த்த மாதிரிதான் இன்னிக்கும் அழகா இருக்கீங்க. 

பத்மினி :- ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணின் அழகைப் புகழறதுக்கு ரொம்ப தாங்க்ஸ்! 

சந்திரகாந்தா :- பல வேலைகளையும் வைத்துக்கொண்டு எப்படி நாட்டிய நாடகம் போட உங்களுக்கு நேரம் கிடைக்குது? ஒரு நாளைக்கு இருப்பது இருபத்து நாலு மணி நேரம்தானே?  

பத்மினி :- இருபத்துநாலு மணி நேரம் தானா? நான் அதுக்கு மேலே இருக்கும்னு நினைச்சேன். (சிரிப்பு)… இரவு நேரங்களில்தான் ஒத்திகை வைத்துக் கொள்கிறோம். எனக்கு தினமும் ஷூட்டிங் முடிஞ்சதும், ராத்திரி பத்து மணிக்கு மேலே ஒத்திகை வெச்சுப்போம். காலை நாலு ஐந்து மணிவரை நடக்கும். இதுக்கெல்லாம் எங்க குரு கோபாலகிருஷ்ணன் தான் ரொம்ப உதவி பண்றார். 

சந்திரகாந்தா :- பெண்கள் பலர் இதற்கு ஒத்துழைக்கறாங்க இல்லையா? உங்க குழுவிலிருந்து முன்னுக்கு வந்த பெண்கள் யாரையாவது சொல்லுங்க. 

பத்மினி :- ஏன்? உன்னையே சொல்லலாமே! என் குழுவிலே நீ நாட்டியம் ஆடலேன்னாலும் சின்ன வயசுலே இங்கே வந்து எங்க வீட்டிலேதானே கொஞ்சம் கத்துகிட்டே! 

சந்திரகாந்தா :- ரொம்ப தாங்க்ஸ்! அது உங்க வாயாலே வரணும்னு தான்……. கேட்டேன். ஆமா, படங்களிலும் நடித்துக் கொண்டு ஓய்வே இல்லாமல் நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக்கிறது சிரமமாக இல்லையா? 

பத்மினி :- ஓய்வு வேணும்னு இருதயம் துடிக்கறதை நிறுத்திட்டால் என்ன ஆகும்? அது மாதிரி நாட்டியம் என் உயிர்த்துடிப்பு. அதனால்தான் அடாது படப்பிடிப்பு இருந்தாலும் விடாது நாட்டியமும் ஆடுகிறேன்.

சந்திரகாந்தா :- படத்தயாரிப்பாளர்கள்  ‘விட மாட்டோம்’னு அடம் பிடித்தால்? 

பத்மினி :- ஒருவரும் அப்படிச்செய்றதில்லை. 6-30 மணிக்கு டான்ஸ் இருந்தா, 5 மணி வரை தான் கால்ஷீட் கொடுப்பேன். அவர்களும் அட்ஜெஸ்ட் பண்ணிப்பாங்க! ரிகர்ஸலுக்கு நான் அதிகமா டைம் எடுத்துக்கறது கிடையாது. எனக்குப் பதிலா யாரையாவது ஒரு பெண் அந்த ஒத்திகையில் மற்றவர்களோடு பங்கு எடுத்துப்பா. நான் பிறகு வந்து ‘ஜாயிண்’ பண்ணிப்பேன். 

Padmini’s 25 Years in the Dream Factory

சந்திரகாந்தா :- “நீங்கள் போடும் நாட்டியத்தை மேல் நாட்டு பாணியில் சொல்ல வேண்டுமானல் ‘பாலே’ என்று சொல்லலாமா? 

பத்மினி :- இதை ‘பாலே’ என்று சொல்ல முடியாது!  இதை நாங்க டான்ஸ் டிராமா என்றுதான் சொல்கிறோம். டிராமாவுக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். ரசிகர்களுக்குச் சுலபத்தில் புரியாத முத்திரைகளை காட்டிகிட்டு இருந்தா என்ன பிரயோசனம்? எதையும் ஜனங்கள் ரசிக்கற மாதிரி அழகாக் கொடுக்கறதைத்தான் கலை என்று நான் நினைக்கிறேன். 

சந்திரகாந்தா :- கலைக்கு புது விளக்கம் தர்றீங்களே! 

பத்மினி  :- அது என் நம்பிக்கை. எல்லா தரப்பினருக்குமே புரிகிற மாதிரி, அமைவதுதான் கலையின் வெற்றி. மக்களுக்காக மக்களால்  வளர்க்கப்படும்போதுதான் அது நிலை பெறுகிறது என்று நான் நம்புகிறேன். 

சந்திரகாந்தா :-  நீங்க போட்ட நாட்டிய நாடகத்திலே சாகுந்தலம் சிறந்ததுன்னு நினைக்கிறீங்களா? 

பத்மினி :- சிறந்ததுதான். ஆனால், எனக்குப் பிடிச்சது தசாவதாரம்.   

சந்திரகாந்தா :- இந்த டான்ஸ் டிராமாவுக்கு ஏன் புராணக் கதைகளா தேர்ந்தெடுக்கிறீங்க? சமூகக் கதைகளை எடுத்து மேல் நாட்டில் செய்வது போல செய்தால் எடுபடாதா?   

பத்மினி :- நல்லா எடுபடுமே!….. அதற்கு ஆண்களும் எங்களோட ஆடணும். அப்போ நல்லா இருக்கும்…. பெண்கள் ஆண்கள் மாதிரி பேண்டும் கோட்டும் போட்டுக்கிட்டு வந்தா… சிரிப்பாங்க. எங்க குரூப்லே எல்லாரும் பெண்கள். அதனாலேதான் நாங்க புராணக் கதையாவே எடுத்துக்கறோம். 

சந்திரகாந்தா :- ஆண்களை வைத்துக்  கொண்டு போட முடியுமா?  

பத்மினி :- நிச்சயமாப் போட முடியும். அது ரொம்ப நன்றாகவும் இருக்கும். ரவீந்திரநாத் தாகூர் எழுதின பல கதைகளைப் போடலாம்.  

சந்திரகாந்தா :-  கடவுள் வேஷத்துக்குப் பெண்களை ஏன் போடறீங்க? அதற்கும் ஆண்களைப் போட்டா என்ன?  

பத்மினி :- எங்க குரூப்லே இருக்கறவங்க பெண்கள் தானே! மேலும், கடவுள் வேஷத்துக்கு பெண் அம்சம்  ‘பெமினேன் டச்’ வந்தா நல்லா இருக்கும். 

சந்திரகாந்தா :- நாட்டிய நாடகத்தை எல்லா வயதினர்களும் நன்றாக ரசிக்கிறார்களா ?  

பத்மினி :- அநேகமாக!…. ஆனால் பொதுவாக பதினைஞ்சு வயசுக்கு உட்பட்டவங்களுக்குச் சரியாப் புரிவதில்லை. என்றாலும் எங்க நாட்டிய நாடகத்தை தென் இந்தியாவிலே மட்டும் அல்ல, வட இந்தியாவிலும் எல்லா வயதினரும் நன்றாகவே ரசித்தார்கள். அந்த பாவம், அசைவு எல்லாம் அவர்களுக்கு ரொம்பவும் புரியுது.  

சந்திரகாந்தா :- பாஷைப் பிரச்னை?  

பத்மினி :- அதுதான் நாட்டிய நாடகத்தின் பெருமை. அதற்கு  பாஷையே கிடையாது! எந்த பாஷையில் போட்டாலும் மற்ற மொழிக்காரர்கள் எல்லாரும் நன்றாக ரசிப்பாங்களே!  

சந்திரகாந்தா :- உங்களுக்கு பல நாட்டியங்கள் தெரியும். கதகளி, பரத நாட்டியம், கதக், மணிபுரி…. இதிலே உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்?  

பத்மினி  :-  எனக்கு எல்லாமே பிடிக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்… கதகளியிலே வேகம் இருக்கும். காதலி கிட்டே சரஸமாடுகிற சமயத்திலே கூட, சண்டை போடற மாதிரி இருக்கும். மணிபுரி, கொஞ்சம் ஸாஃப்ட்.  தூக்க மயக்கம் மாதிரி இருக்கும். . . பரத நாட்டியத்திலே நவரசங்கள்… அதிலே பக்தி-பாவம்- ‘லவ்’ எல்லாம் இழையோடிக்கிட்டு இருக்கும்.  

சந்திரகாந்தா  :– உங்களுக்கு ‘வில்லி’ வேஷம் ஏற்று நடிக்கப்பிடிக்குமா?  

பத்மினி  :- ஓ! நல்ல பாத்திரமா, என் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருந்தா நிச்சயமா நடிப்பேன்! உதாரணமா ‘விஸிட்’லே இங்கிரீட் பெர்க்மென்… நடிச்ச மாதிரி!  

சந்திரகாந்தா  :– நீங்கள் நடித்த பாத்திரங்களில் பிடித்தது எது…?  

பத்மினி  :- மங்கையர் திலகத்தில் நான் நடித்த பாத்திரம்தான் எனக்குப் பிடித்தது!  

சந்திரகாந்தா  :- நாட்டிய நாடகம் நடத்தற எல்லாரும் ஒரு ஸ்கூல் வெச்சிருக்காங்க. . . நீங்க அப்படி ஏதாவது வெச்சிருக்கீங்களா?  

பத்மினி :- இல்லை! அப்போ அப்போ செட் பண்ணி அப்போ அப்போ ஸ்டேஜ் பண்ணிடுவேன். . . . . . அவ்வளவுதான்! 

சந்திரகாந்தா  :- கலையுலகில் எல்லா துறைகளிலும் நீங்க அமோகமாக வெற்றி பெற்றிருக்கிறதை நினைக்கும்போது…

பத்மினி :- இல்லை… இல்லை! இன்னும் ஒரு துறை பாக்கியிருக்கிறது! 

சந்திரகாந்தா :- என்ன? 

பத்மினி :- டைரக்ஷன் துறை!

சந்திரகாந்தா :– அதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா!  

பத்மினி :- ஒரே ஒரு படம் மட்டும் டைரக்ட் செய்ய வேண்டும் என்று ஆசையும் இருக்கிறது; அதற்காகத் திரையுலகின் கலங்கரை விளக்கமாக இருந்து வந்த மேதை ஒருவரின் ஆசியும் இருக்கிறது. காலம் வரும்போது முயன்று பார்ப்பேன்!

(18.01.1970 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து..)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.