ஜான்ஜீர்: சட்டீஸ்கரின் ஜான்ஜீர்சம்பா மாவட்டத்தில் பிக்ரிட் கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் வீட்டின் பின்புறம் 11வயது சிறுவன் ராகுல் சாஹூ விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். இதனை தொடர்ந்து சுமார் 4மணியளவில் சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடங்கின. தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு போலீசாரும் உதவி வருகின்றனர். இதுவரை ஆழ்துளை குழாய் அருகிலேயே சுமார் 50 அடி ஆழத்திற்கு இணை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. 60 அல்லது 65அடி தோண்டிய பின், ஆழ்துளை குழாய் கிணற்றுக்குள் செல்ல சுரங்க வழி உருவாக்கப்படும். இரண்டாவது நாளாகவும் சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து பேசி வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
