மத்திய பிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். அப்போது, உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினர் அனில் பிரோஜியா என்பவர் நிதின் கட்கரியிடம் தொகுதி வளர்ச்சிக்கான நிதி வழங்கும்படி கோரியுள்ளார்.
அதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என நகைச்சுவையாக கூறியுள்ளார். இதுகுறித்து நிதின் கட்கரி கூறுகையில், “அனில் பிரோஜியா தனது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அவருக்கு நான் ஒரு நிபந்தனை விதித்துள்ளேன். 135 கிலோவாக இருந்த எனது உடல் எடையை இப்போது 93 கிலோவாக குறைத்துள்ளேன். இது தொடர்பான எனது புகைப்படத்தை அவரிடம் காண்பித்து நீங்களும் உங்கள் எடையைக் குறைத்துக் கொண்டால் நிதி வழங்கப்படும் என அவரிடம் கூறினேன். ஒவ்வொரு கிலோ எடை குறைப்புக்கும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அவரிடம் தெரிவித்துள்ளேன்.” என்றார்.
இதையடுத்து, தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அனில் பிரோஜியா சுமார் 15 கிலோ எடையை குறைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 125 கிலோ எடையுடன் இருந்த அவர், உடற்பயிற்சி, யோகா, உணவுப்பழக்கம் உள்ளிட்டவைகளால் 4 மாதங்களில் 15 கிலோ எடையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னை உடற்தகுதி பெற ஊக்குவிக்கும் வகையில் நிதின் கட்காரி பிப்ரவரி மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஒவ்வொரு கிலோ எடை குறைப்புக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்குவேன் என்று கூறியிருந்தார். நான் அவருடைய கட்டளையை ஏற்று கடந்த நான்கு மாதங்களில் 15 கிலோ எடையை குறைத்துள்ளேன். இதன் மூலம் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.15,000 கோடியை அவரிடம் கேட்க எனக்கு உரிமை உள்ளது.” என்றார்.
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது அவரை சந்தித்து, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நினைவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ள அனில் பிரோஜியா, தனது தொகுதி வளர்ச்சிக்கான நிதிக்காக மேலும் தனது எடையை குறைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.