மழலையர் வகுப்புகள் விவகாரம்: பின்வாங்கிய அரசு… பின்னணி என்ன?

கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பலர் பொறுப்புவகித்தனர். என்றாலும் பள்ளிக்கல்வித் துறையில் ஏகப்பட்ட குளறுபடிகள். குறிப்பாக, செங்கோட்டையன் பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த காலத்தில், அந்தத் துறையில் குளறுபடிகளும் பல்டிகளும் அன்றாட நடவடிக்கைகளாக மாறியிருந்தன.

செங்கோட்டையன்

தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க ஆட்சியின்போது பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளை வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தான் தி.மு.க ஆட்சியிலும் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகின்றன. சமீபத்தில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளுக்கு மூடுவிழா நடத்துவது என்கிற அரசின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, 2018-ம் ஆண்டு எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்கியது.

எடப்பாடி பழனிச்சாமி

தமிழகம் முழுவதும் 2,381 அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவற்றில், 2019- – 2020 கல்வியாண்டில், சுமார் 60,000 குழந்தைகள் சேர்ந்தனர். அதன் பிறகு, கொரோனா பெருந்தொற்று காரணமாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் செயல்படவில்லை. மாணவர் சேர்க்கையும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி மழலையர் வகுப்புகளை மூடுவது என்று முடிவுசெய்த பள்ளிக்கல்வித் துறை, மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், மழலையர் வகுப்புகளில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அ.தி.மு.க., பா.ம.க உட்பட பல கட்சிகளும் அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தன.

ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை மூடுவதென்று அரசு முடிவெடுத்துள்ளதாக வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது, அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது” என்று அறிக்கை வெளியிட்டார்.

மேலும் அந்த அறிக்கையில், “அரசுப் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை அதிகளவில் ஈர்க்கும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2,381 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். இந்த நடவடிக்கையின் காரணமாக, பெற்றோர்களின் நிதிச் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், தி.மு.க அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததோடு, நடைமுறையில் மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களை படிப்படியாக நிறுத்திக் கொண்டுவருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள்

மழலையர் பள்ளிகளை மூடும் நடவடிக்கையால், தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறையும் நிலை உருவாகும். இது ஒரு சங்கிலித்தொடர் போல் மேல்நிலை வகுப்பு வரை செல்லும் நிலை உருவாகும். இது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாக குறைக்க வழிவகுக்கும். தனியார்மயத்திற்கு வித்திடும் செயல் என்று பொதுமக்களும், கல்வியாளர்களும் கருதுகிறார்கள். இது கல்வியை வியாபாரமாக ஆக்குவதற்குச் சமம். எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு முன்பு இருந்ததைப் போலவே எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை நடத்தி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, மழலையர் வகுப்புகளை மூடும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளை மூடக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்று அரசு தனது முடிவைக் கைவிட்டிருக்கிறது என்றாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு என்ன காரணம், இதன் பின்னால் இருந்தவர்கள் யார் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.

மழலையர் வகுப்புகளை எடுத்துவந்த ஆசிரியர்கள் தங்களை மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட சில முடிவுகளின் அடிப்படையில், மழலையர் வகுப்பு ஆசிரியர்களை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாக மாற்றுவதற்கும் மழலையர் வகுப்பு குழந்தைகளை அங்கன்வாடிகளுக்கு மாற்றவும் தொடக்கப் பள்ளி இயக்குநரான அறிவொளியின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள்

கல்வித்துறையில தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறியிருந்தாலும்கூட, ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளிகளும், ஓர் ஆசிரியர் மட்டும் பணியாற்றும் பள்ளிகளும் இருக்கும் அவலம் தமிழகத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவரும் இந்த காலக்கட்டத்தில், அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்களில் சில லட்சம் பேர் அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் நியமிக்கவும், மாணவர் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கவும் அரசு தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பம். அப்படியிருக்கும்போது, குழப்பமான, குளறுபடியான ஆலோசனைகளுக்கும் முடிவுகளுக்கும் இடம் கொடுக்காமல், தெளிவான, சரியான திசையில் பள்ளிக்கல்வித்துறை பயணிக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.