பள்ளி, கல்லூரிகளில் 100% பாடங்கள் முழுமையாக நடத்தப்பட வேண்டும்! கல்வி அமைச்சர்கள் தகவல்…

சென்னை:  பள்ளி, கல்லூரிகளில் 100% பாடங்கள் முழுமையாக நடத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் கடந்த இரு ஆண்டுகளாக முழுமையாக பாடங்கள் நடத்தப்படாமல், மாணாக்கர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு, பாடங்களை முழுமையாக நடத்த பள்ளிக்கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையில், 1முதல் 10ம்வகுப்பு வரை பள்ளிகள் 13ந்தேதி திறக்கப்பட்டுள்ளது. மாணாக்கர்களும் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு  வந்துகொண்டி ருக்கின்றனர். முதல் ஒருவாரம் மாணாக்கர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,  நடப்பாண்டு அனைத்து பள்ளிகளிலம் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது என்றவர் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, பாடங்கள் குறைத்து நடத்தப்பட்ட நிலையில் நடப்பாண்டு முழுமையாக 100 சதவிகிதம் நடத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல, வகுப்பறைக்கு மாணவர்கள் செல்லிடை பேசிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி கொண்டுவரும் செல்லிடை பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டால் திரும்ப தரப்படாது  எச்சரித்ததுடன்,  மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், அரசு பள்ளிகளில்,  வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அதுபோல செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , கல்லூரிகளில் 100% பாடங்கள் நடத்தப்படும் என்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 69% இடஒதுக்கீட்டை பின்பற்ற சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.