புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு, தான் போட்டியிட வைக்கும் வேட்பாளரை குடியரசு தலைவராக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்கான பொறுப்பை, பாஜகவின் மூத்த தலைவரும் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கிடம் வழங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் பல்வேறு தலைவர்களுடன் கடந்த புதன்கிழமை முதல் ராஜ்நாத் சிங், பாஜக வேட்பாளரை ஆதரிக்கும்படி தொலைபேசியில் கோரி வருகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மொத்த வாக்குகளில் 48 சதவிகிதம் ஆளும் மத்திய அரசிடம் உள்ளது. இதில், கூடுதலாக 3 சதவீதம் பெற பாஜக, 3 மாநில முதல்வர்களை நம்பி உள்ளது. இப்பட்டியலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பிஹார் முதல்வரான நிதிஷ் குமார் முதலிடம் பெற்றுள்ளார். இவருடனான பாஜக உறவு சமீப காலமாக மோதலுக்கு உள்ளாகி வருகிறது. பாஜகவின் ஆதரவுடன் ஆளும் இவர், கடந்த இரு குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல்களில் கூட்டணியை பற்றிக் கவலைப்படாமல் ஆதரவளித்திருந்தார். எனவே, இந்த முறை அவருடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசி வருகிறார்.
அடுத்தபடியாக பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக் உள்ளார். வேட்பாளரை பொறுத்து முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஒடிசாவை சேர்ந்த பழங்குடித் தலைவரும் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்மு பெயரையும் பாஜக பரிசீலிப்பதாகத் தெரிகிறது.
மூன்றாவதாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டியை பாஜக குறி வைத்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தலைவரான இவர் ஏற்கெனவே பல விவகாரங்களில் பாஜகவிற்கு ஆதரவளித்துள்ளார். எனவே அவரது ஆதரவு கிடைக்கும் என பாஜக நம்புகிறது.
இந்நிலையில், குடியரசு தலைவர் வேட்பாளராக பேசப்படும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளார். இவர், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் கூட்டத்துக்கு வந்த 17 எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவர்களுடன் வரும் 21-ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். கடந்த முறை எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பவாரை முன்னிறுத்த முயற்சிக்கப்பட்டது. இதற்கு மறுத்துவிட்ட பவார் வரும் 21-ல் தன் முடிவை மறுபரிசீலனை செய்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.