சென்னை: “தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து இன்று மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 2 நாட்களில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது படகுகளை சிறைப்பிடித்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிப்பது வேதனையளிக்கிறது.
நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்தன. இச்சூழலில், தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மீனவர்கள், படகுகளை விடுவிக்குமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று மநீம தெரிவித்துள்ளது.