சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்காக பொதுக் கட்டிடங்களில் தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்திய சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்குவது தொடர்பாக வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஆனந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில், மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கையின்போது, ‘‘அரசு, தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்கு தடையில்லா சூழலுக்கான வசதிகளை சிறப்பாக அமைப்பதை ஊக்குவிக்க ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பொது நிறுவனத்துக்கான விருது, சிறந்த தனியார் நிறுவனத்துக்கான விருது என 2 விருதுகள், 10 கிராம் தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ரூ.1.60 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்’’ என்று முதல்வர் அறிவித்தார்.
இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர், முதல்வரின் இந்த அறிவிப்பின்படி விருது வழங்க ரூ.1.60 லட்சத்தை ஒதுக்கும்படி அரசை கேட்டுக் கொண்டார். இதைப் பரிசீலித்த தமிழக அரசு, ஆண்டுதோறும் டிச.3-ம் தேதி, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் இவ்விருதுகளை வழங்க ரூ.1.60 லட்சத்தை ஒதுக்கி உத்தரவிடுகிறது.
இந்த விருதைப் பெற, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பிரதான நுழைவு வாயிலில் கைப்பிடிகளுடன் கூடிய சாய்தளம் போதிய அளவில் இருக்க வேண்டும். வரவேற்பறை தகவல் அளிக்கும் மையம் ஆகியவை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் இருக்க வேண்டும். தாழ்வாரங்களின் அகலம் 1,500 மிமீ ஆக இருக்க வேண்டும். கட்டிடங்களில் மின் தூக்கிகளின் கதவுகளின் அகலம் ஒரு மீட்டராக இருக்க வேண்டும். படிக்கட்டுகளின் அகலம் 1200 மிமீ ஆகவும், இருபுறமும் கைப்பிடிகளுடனும் இருக்க வேண்டும். எளிதில் அணுகும் வகையில் கழிப்பறை வசதிகள், சிற்றுண்டி உணவகம், குடிநீர் குழாய்கள் ஆகியவை இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கென தனியான அடையாள குறியீடுகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் தடையற்ற சூழல் ஏற்படுத்தியதற்கான சான்றாக உரிய புகைப்படத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கள ஆய்வின் அடிப்படையில் விருது வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.