ஓ.பி.எஸ் வழக்கு: வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைப்பு; இ.பி.எஸ் பதில் அளிக்க உத்தரவு

சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, இ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஜூன் 23 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச், பொதுக்குழு நடத்தலாம் ஆனால், 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால், பொதுக்குழு களேபரமாக முடிந்தது. மீண்டும் அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூலை 11 ஆம் தேதி போதுக்குழு நடைபெற உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஓ.பி.எஸ்-ஸும் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம், ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட்டு தீர்க்கம் முடியாது. சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் மற்றும் வைரமுத்து தனித் தனியாக தாக்கல் செய்திருந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொதுக்குழுவைக் கூட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு அனுமதி உள்ளதா? பொதுக்குழு நோட்டீஸில் கையயெழுத்துப் போட்டது யார்? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், எத்தனை நாள்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன் வைத்தனர்.

அதற்கு, பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, நான் என்ன உத்தரவிட முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வை அணுகி நிவாரணம் பெறலாம் என்று குறிப்பிட்டதை ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில், பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ‘ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுவைக் கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேறு நிவாரணங்களுக்காக உயா் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது என்று வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீா்கள்? எனக் கேள்வி எழுப்பினாா். அப்போது, பன்னீா்செல்வம் தரப்பு வழக்குரைஞா் ‘பொதுக் குழுவுக்கு தடை கோரும் இந்த வழக்கை உயா் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை வியாழக்கிழமை (ஜூலை 7) தாக்கல் செய்கிறோம். எனவே, விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என வாதிட்டாா்.

அப்போது நீதிபதிகள், ‘உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிா்பந்திக்க முடியாது’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது’ என்றுவாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 7) ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று பிற்பகலில் விசாரணை தொடங்கியது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பிஎஸ் இருதரப்பும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 8) வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.