தமிழ் திரைத்துறையின் வரலாற்றை எழுதும்போது சிவாஜி கணேசன் என்ற பெயரை யாராலும் தவிர்க்க முடியாது. நடிப்புக்கு இலக்கணம் என்று எல்லோரும் புகழும் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் சிவாஜி. கடந்த 1952-ம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் 300-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பிறமொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். செவாலியர் பட்டம் தொடங்கி, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் எனப் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இவருக்குப் பிரபு, ராம்குமார் என இரண்டு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த 2001-ம் ஆண்டு சிவாஜி கணேசன் மறைவுக்குப் பின்னர், அவரின் சொத்துகளை இந்த நால்வரும் நிர்வகித்து வந்தனர். சிவாஜிக்குச் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் சிவாஜியின் மறைவுக்குப் பின்னர் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று திரைத்துறையினர் நினைத்துவந்தனர்.
இந்த நிலையில், சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும், பிரபு, ராம்குமார் ஆகியோர் தங்களுக்குத் தந்தையின் சொத்தில் சரியான பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அவர்கள் இருவரும், “தந்தையின் சொத்தை பிரபு, ராம்குமார் ஆகிய இருவரும் முறையாக நிர்வகிக்கவில்லை. கோபாலபுரத்தில் உள்ள வீட்டை எங்களுக்குத் தெரியாமல் விற்றுவிட்டார்கள். மேலும், ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகளிலிருந்து வரும் வாடகை பணத்திலும் எங்களுக்கு எந்த பங்கு தருவது கிடையாது.

அப்பா சேர்த்துவைத்த 1,000 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் வைரம் போன்றவற்றில் எங்களுக்கு எந்த பங்கும் தராமல் ஏமாற்றிவிட்டார்கள். எங்கள் தந்தை எந்த உயிலும் எழுதிவைக்காத நிலையில், ராம்குமார் மற்றும் பிரபு ஒரு பொய்யான உயிலைத் தயாரித்துள்ளனர். மேலும், பொது அதிகாரப் பத்திரத்தில் எங்களிடம் கையெழுத்து வாங்கி ஏமாற்றியுள்ளார். எங்களுக்கே தெரியாமல் சொத்துக்களை விற்றுள்ளதால் அந்த பத்திரங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
சாந்தி தியேட்டரில் உள்ள கோடிக் கணக்கில் மதிப்புடைய பங்குகளை எங்களுக்குப் பங்கு தராமல் ராம்குமார் மற்றும் பிரபு பெயருக்குப் பங்குகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எங்களின் தாய்வழி சொத்துகளில் எங்களுக்கு எந்த பங்கும் தரப்படவில்லை. இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம் காரணமாகத் தந்தையின் சொத்தில் எங்களுக்கும் உரிமை இருக்கிறது. எனவே, பாகப்பிரிவினை செய்துதர உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்கள் துஷ்யந்த், விக்ரம் பிரபு ஆகிய இருவரும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கானது விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. சொத்துப் பிரச்னை காரணமாக சிவாஜி கணேசனின் மகள்கள் அவர்களின் சகோதரர்கள் ஏமாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது தமிழ் திரைத்துறை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.