பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு படத்தை ட்வீட் செய்திருந்தார். அதில் ஒருவர் தன் வயது முதிர்ந்த தாயை ஒரு கூடையில் வைத்துச் சுமந்து செல்லும் காட்சி இருந்தது.
மேலும் அந்தப் படத்தில் அந்த நபர் 20 ஆண்டுகளாகத் தன் பார்வையற்ற தாயைச் சுமந்துகொண்டு தீர்த்த யாத்திரை செல்வதாகவும் ராமாயணத்தில் வரும் ஷ்ரவன் போன்ற கலியுக ஷ்ரவன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் படத்தைப் பகிர்ந்து அனுபம் கேர், இந்தத் தகவல் உண்மையானால் அவருக்கு உதவக் காத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்று தெரிவித்தால் அவரைக் கண்டு மரியாதை செய்து அவரின் பயணத்துக்கு வேண்டிய வசதிகளைச் செய்துதரக் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் அந்தப் படம் உண்மைதான் என்றும் அந்த நபரின் பெயர் கைலாஷ் கிரி என்று தெரிவித்தனர்.
The description in the pic is humbling! Pray it is true! So If anybody can find the whereabouts of this man please do let us know. The @anupamcares will be honoured to sponsor all his journeys with his mother to any pilgrimage in the country all his life. #MondayMotivation pic.twitter.com/Ec6dDE1QbN
— Anupam Kher (@AnupamPKher) July 4, 2022
யார் இந்த கைலாஷ் கிரி?
கைலாஷ் கிரி மத்தியபிரதேசம், ஜபல்பூர் அருகே உள்ள வார்கி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் காவடிபோல் கட்டி அதில் ஒருபுறம் தன் பார்வையற்ற வயதுமுதிர்ந்த தாயையும் மறுபுறம் தனக்குத் தேவையான பாத்திரங்கள் துணிமணிகள் ஆகியவற்றையும் சுமந்துகொண்டு யாத்திரை செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தன் தாயைக் காவடிபோலச் சுமந்து ஆலயங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். நடந்தே இந்த தேசமெங்கும் சென்று கோயில்களில் தரிசனம் செய்கிறார். ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது குறித்து அவரிடம் பலரும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “நான் சிறுவயதாய் இருந்தபோது என் காலில் அடிபட்டு அதில் பிராக்சர் ஏற்பட்டது. அதற்குப் போதுமான சிகிச்சை அளிக்கும் அளவுக்கு எங்கள் குடும்பத்துக்கு வசதியில்லை. என் தந்தை எனக்குப் பத்து வயதிருக்கும்போதே இறந்துவிட்டார். இந்நிலையில் என் தாய் எனக்குக் கால் குணமாகவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டார். அப்படி குணமானால் தீர்த்த யாத்திரை அழைத்துவருவதாக வேண்டிக்கொண்டார். பலரும் ஆச்சர்யப்படும்படியாக எனக்குக் கால்கள் குணம் அடைந்தது. என்னுடம் பிறந்த சகோதரனும் சகோதரியும் கூட இறந்துவிட்டார்கள். என் தாய்க்கும் வயதாகிக்கொண்டே இருக்கவே நான் அவரின் வேண்டுதலை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தேன். அவரை இந்த முதிய வயதில் தனியே விட்டுவிட்டுச் செல்வது முறையல்ல என்று தோன்றவே அவரையும் என்னோடு கூட்டிச் செல்வது என்று முடிவு செய்தேன். அவரால் நடக்க முடியாது எனவே அவருக்காக இந்தக் காவடியைத் தயார் செய்தேன். என் இருபத்தி நாலாவது வயதில் இருந்து நாங்கள் இருவரும் யாத்திரையாகச் சென்று இந்த தேசத்தின் புண்ணியத் தலங்களை எல்லாம் தரிசித்துவருகிறோம். அனைத்துக் கோயில்களுக்கும் சென்றபிறகு எங்கள் சொந்த ஊர் திரும்பத் திட்டம்” என்றார்.
கைலாஷ் கிரி வட இந்தியாவில் மிகவும் பிரசித்தம். அவர் 2003 ம் ஆண்டுவாக்கில் தமிழகத்துக்கும் வந்து சென்றிருக்கிறார் என்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் தாயைச் சுமந்து செல்லும் பாசத்தைக் கண்டு மக்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். இவரைத் தங்கள் ஊரில் ஒரு நாள் தங்கச் சொல்லி உபசரித்து அனுப்புவதில் பலரும் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் இவரிடம் ஆசி வாங்கிச் செல்வோர் அநேகர். ஏன் அவரிடம் ஆசி பெறுகிறீர்கள் என்று கேட்டால், “பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு நிம்மதியாக இருக்க நினைக்கும் மகன்கள் வாழும் நாட்டில் புராண காலம் போலத் தன் தாயைச் சுமந்துகொண்டு செல்லும் மகனை வணங்கினால் என்ன தவறு?” என்று கேட்கிறார்கள்.
தங்கும் இடங்களில் யாரேனும் உணவு கொடுத்தால் முதலில் தன் தாய்க்கு அதைத் தந்துவிட்டு எஞ்சும் உணவை இவர் சாப்பிடுவார். உணவு கிடைக்காத இடங்களில் தங்க நேர்ந்தால் அவரே சமைத்துத் தன் தாயுக்கும் தந்துவிட்டு உட்கொள்வாராம்.

ராமேஷ்வரம், பூரி ஜகந்நாத், கங்காசாகர், தாராபித், பத்ரிநாத், கேதார்நாத், ரிஷிகேஷ், ஹரித்வார், அயோத்தி என்று இவர்கள் சென்ற புனிதத் தலங்களின் பட்டியல் பெரியது. இன்னும் இவர் தன் தாயோடு தீர்த்த யாத்திரையில்தான் இருக்கிறாரா அல்லது சொந்த ஊர் திரும்பிவிட்டாரா என்று தெரியவில்லை. அனுபம் கேர் இந்தத் தகவலைப் பகிர்ந்து மூன்று நாள்கள் ஆகிறது. எவரும் அவர் எங்கிருக்கிறார் என்கிற தகவலை பகிரவில்லை. கைலாஷ் கிரி பெயரில் ஒரு முகநூல் கணக்கும் உள்ளது. ஆனால் அதில் அவர் படம் தவிர்த்த பதிவுகள் எதுவும் இல்லை. அனுபம் கேரின் ட்வீட் மூலம் அவர் பற்றிய செய்தி வைரலாகி இருப்பதால் விரைவில் அவர் எங்கிருக்கிறார் என்ற செய்தியும் வெளியேவரும்.
இந்தியா ஆன்மிக பூமி. இங்கு விழுமியங்களின் மதிப்புகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதையே கைலாஷ் கிரியின் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள்.
அதே சமயம், கைலாஷ் கிரியின் இந்த 20 ஆண்டு ஆன்மிக நெடும் பயணத்தை விமர்சித்தும் பதிவுகளைக் காண முடிந்தது. உழைக்க வேண்டிய வயதில் உழைத்து முன்னேறி, தாயை சௌகர்யமாகப் புண்ணிய யாத்திரை அழைத்துச் செல்லாமல் இப்படிப் பல ஆண்டுகள் தொடர்ந்து பயணிப்பது தவறு என்றும் கருத்துகள் வெளிப்பட்டு வருகின்றன.