51 வயதான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் எலான் மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் வைப்பதற்காக ஆவணங்களைக் கொடுக்கும் போது இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவருடைய முதல் மனைவியான கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகள் மற்றும் கனடா பாடகி கிரிமிஸ் மூலம் இரண்டு குழந்தைகள் என ஏழு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்து மொத்தம் 9 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார் எலான் மஸ்க்.
Doing my best to help the underpopulation crisis.
A collapsing birth rate is the biggest danger civilization faces by far.
— Elon Musk (@elonmusk) July 7, 2022
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய எலான் மஸ்க், “மக்கள்தொகை வளர்ச்சி குறைவாக இருக்கிறது, இதை அதிகப்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டி சமூகவலைதள பயனர்கள் பலர் எலான் மஸ்க்கைக் கிண்டல் செய்து ட்வீட்களைப் பதிவிட்டு வந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள்தொகை குறைவதைக் கட்டுப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். பிறப்பு விகிதம் குறைந்து வருவது மனித நாகரிகத்திற்கு ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்தப் பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.